“சண்டைக்காரி” ஆர். மாதேஷ் இயக்கத்தில் ஜெயபாலன் ஜெயக்குமார், ஷர்மிலா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை அம்ரிஷ். இந்த படத்தில் விமல், ஸ்ரேயா சரன், பிரபு, கே. ஆர். விஜயா, ரேகா, சத்யன், உமா பத்மநாபன், புன்னகை பூ கீதா, கிரேன் மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
லண்டனில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் ஸ்ரேயாவிடம் உதவியாளராக பணியில் சேர்கிறார் விமல். பொறியியல் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றிருந்தாலும், தான் உருவாக்கிய செயலியை சந்தைப்படுத்தும் நோக்கத்தில் இந்த வேலையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஸ்ரேயாவிடம் பணியாற்றுவது விமலுக்கு மிகப்பெரிய சவாலாக அமைகிறது. ஒருகட்டத்தில் ஸ்ரேயாவின் லண்டன் விசா காலாவதியாகிறது. விசாவை நீட்டிக்க இந்தியாவுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சி.இ.ஓ பதவியும் கைநழுவும் சூழல் உருவாகிறது. இதற்கு தீர்வு காண நினைக்கும் ஸ்ரேயா, லண்டனில் நிரந்தர குடியுரிமை பெற்ற விமலை திருமணம் செய்துகொண்டதாகக் கூறி தனது குடியுரிமை பிரச்சினைக்கு முடிவு காண திட்டமிடுகிறார். மறுபுறம், ஸ்ரேயாவின் தொழில் போட்டியாளருடன் ரகசியமாக கைகோர்க்கும் விமல், அவருடைய திட்டத்தை முறியடிக்க நினைக்கிறார். ஸ்ரேயாவின் திருமண நாடகத்திற்கு சம்மதிக்கும் அவர், அதற்கு ஒரு நிபந்தனையையும் முன்வைக்கிறார். அதன்படி, தமிழகத்தில் வசிக்கும் தனது பெற்றோரை ஸ்ரேயா நேரில் சந்திக்க வேண்டும். இதை ஏற்றுக்கொண்டு விமலுடன் தமிழகம் வரும் ஸ்ரேயாவுக்கு எதிர்பார்த்தது நடந்ததா? அல்லது விமலின் பின்னணி திட்டம் பலித்ததா? என்பதே படத்தின் மையக்கதை.
லண்டன் காட்சிகளாக இருந்தாலும், தமிழக கிராமப் பின்னணியாக இருந்தாலும் விமலின் நடிப்பில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. கதாபாத்திரத்திற்கேற்ப தோற்றத்தில் சில மாற்றங்கள் இருந்தாலும், நடிப்பில் வழக்கமான விமலையே பார்க்க முடிகிறது. இயல்பான காட்சிகளிலும், காமெடி தருணங்களிலும் தனது வழக்கமான பாணியை பின்பற்றியிருக்கிறார்.
ஸ்ரேயா, அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு அனைவரிடமும் கோபமாகவும் கடுமையாகவும் நடந்துகொள்ளும் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தின் குணாதிசயத்திற்கு அவரது தோற்றம் பொருந்தினாலும், நடிப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிலான அழுத்தம் இல்லை. இருப்பினும், கொடுக்கப்பட்ட வேலையை ஓரளவுக்கு சிறப்பாக செய்திருக்கிறார்.
பிரபு, உமா பத்மநாபன், புன்னகை பூ கீதா, சத்யன், கே.ஆர்.விஜயா, ரேகா, தேவ் கில், கிரேன் மனோகர், மகாநதி சங்கர் உள்ளிட்ட மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்கள். குறிப்பாக குடும்ப பின்னணி தொடர்பான காட்சிகளில் இவர்களின் அனுபவம் தெரிகிறது.
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவின் கேமரா லண்டனின் நகர்ப்புற அழகையும், தமிழக கிராமத்தின் இயற்கை சூழலையும் அழகாக பதிவு செய்துள்ளது. பாடல் காட்சிகளில் வண்ணமயமான காட்சியமைப்பும் கவனம் பெறுகிறது.
அம்ரிஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசை காட்சிகளின் உணர்வுக்கு ஏற்றபடி பயணிக்கிறது. படத்தின் காட்சிகளுக்கு இசை தேவையான அளவு துணை நிற்கிறது.
தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பு காட்சிகளை நேர்த்தியாக இணைத்திருந்தாலும், திரைக்கதையில் இருக்கும் தொய்வை முழுமையாக சரி செய்யவில்லை. குறிப்பாக சில காட்சிகள் இன்னும் சுருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்திருக்கலாம்.
ஆர்.மாதேஷ் எழுதி இயக்கியிருக்கும் இப்படம், எப்போதும் கோபத்துடன் இருக்கும் ஒரு பெண்ணுக்குள் காதல் எப்படி உருவாகிறது என்பதை மையமாகக் கொண்டு பயணிக்கிறது. லண்டன் மற்றும் தமிழக கிராமம் என இரண்டு மாறுபட்ட பின்னணிகளை பயன்படுத்தி காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை கலந்து ஒரு கமர்ஷியல் படமாக உருவாக்க முயற்சி செய்திருக்கிறார்.
ஆனால், விமல் – ஸ்ரேயா இடையேயான உறவு மற்றும் காதல் காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக அமையவில்லை. இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் பெரிதாக ஈர்க்கவில்லை. இதனால் கதையின் முக்கியமான காதல் பகுதி பார்வையாளர்களிடம் அழுத்தமாக பதியாமல் போகிறது.
படத்தின் மிகப்பெரிய பலவீனம் திரைக்கதையில் இருக்கும் சில லாஜிக் குறைபாடுகள். தமிழகத்தில் கல்வி முடித்து லண்டன் செல்லும் விமல், தனது குடும்பத்தின் மூலம் நிரந்தர லண்டன் குடியுரிமை பெற்றிருக்கிறார். ஆனால், லண்டனில் பல ஆண்டுகளாக ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் ஸ்ரேயாவுக்கு இன்னும் குடியுரிமை கிடைக்காமல் இருப்பது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இதுபோன்ற விஷயங்களுக்கு படத்தில் தெளிவான விளக்கம் இல்லை.
இத்தகைய தர்க்கக் கேள்விகளை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, லண்டன் – தமிழகம் என இரண்டு களங்களில் நடக்கும் காதல், குடும்பம் மற்றும் காமெடியை பொழுதுபோக்கு நோக்கில் அணுகினால் படம் ஓரளவு ரசிக்க வைக்கிறது.





