“மக்கள் காவலன்” எப்போது ரிலீஸ்? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கே. மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் புதிய அதிரடி திரைப்படமான ‘மக்கள் காவலன்’ வரும் டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் கே. மணிகண்டனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ளார். ‘பைசன் காளமாடன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகும் அடுத்த படமாக ‘மக்கள் காவலன்’ அமைந்துள்ளது.

ஒரு சாதாரண மனிதன் தனது வாழ்க்கையை கண்ணியத்துடன் நடத்த விரும்புகிறான். ஆனால், ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு அவனை இரண்டு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளுகிறது — அடிபணிவதா அல்லது எதிர்த்து நிற்பதா? இந்தப் போராட்டம் ஒரு தனிமனிதனின் வாழ்வாதாரப் பிரச்சினையாகத் தொடங்கி, பின்னர் மிகப்பெரிய சமூகப் போராட்டமாக உருவெடுக்கிறது.

தான் ஒருபோதும் விரும்பாத தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழலுக்கு கதாநாயகன் தள்ளப்படுகிறார். போராட்டம் தீவிரமடையும்போது அதற்கான விலையும் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில், ஒரு சாதாரண மனிதனுக்கும் மக்களின் பாதுகாவலனுக்கும் இடையேயான எல்லை மறைந்து போகிறது.

லட்சியம், மன உறுதி, விடாமுயற்சி மற்றும் தடைகளைத் தாண்டிச் செல்லும் துணிச்சல் ஆகியவை இப்படத்தின் முக்கியக் கருப்பொருள்களாக அமைந்துள்ளன. சமூகமும் சூழலும் விதிக்கும் எல்லைகளை ஏற்றுக்கொள்ளாமல், தனது கனவுகளை நோக்கி தொடர்ந்து பயணிக்கும் ஒருவனின் கதையாக ‘மக்கள் காவலன்’ உருவாகியுள்ளது.

எழுத்து, டப்பிங் மற்றும் சிறிய கதாபாத்திரங்களில் நடிப்பது என திரைத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கிய மணிகண்டன், இன்று முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். விடாமுயற்சி, தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் ஆர்வம் மற்றும் நடிப்பின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவை அவரது திரைப்பயணத்தின் முக்கிய அடையாளங்களாக பார்க்கப்படுகின்றன. அந்தப் பயணத்துடன் ஒத்திசையும் வகையில், அவரது பிறந்த நாளில் ‘மக்கள் காவலன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற மணிகண்டன், முதன்முறையாக முழுமையான ஆக்ஷன் கதைக்களத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

படத்தில் மணிகண்டனுடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி, ரகு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, ‘பைசன் காளமாடன்’ படத்திற்குப் பிறகு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். அருள் மோசஸ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை பாப்பநாடு சி. உதயகுமார் கவனித்துள்ளார்.

சண்டைக் காட்சிகளுக்கு டான் அசோக், ஒலி வடிவமைப்புக்கு ஆண்டனி ஜெயரூபன், ஆடை வடிவமைப்புக்கு சுரேஷ்குமார், ஒப்பனைக்கு ராமச்சந்திரன் ஆகியோர் பங்களித்துள்ளனர்.

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மக்கள் காவலன்’, வரும் டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.