இயக்குநராக இருந்து நடிகராக வெற்றிகரமாக மாறியவர்களில் குறிப்பிடத்தக்கவரான பாலாஜி சக்திவேல், தனது வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகள் மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார். உணர்ச்சி ஆழமும் யதார்த்தமும் நிறைந்த கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ள அவர், தற்போது ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ என்ற 12 நிமிட பைலட் திரைப்படத்தில் இரட்டை பரிமாணங்கள் கொண்ட கதாநாயகனாக நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான “டிஎன்ஏ” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம், “காந்தி கண்ணாடி” படத்தில் மனதைத் தொடும் நடிப்பு மற்றும் Warrant இணையத் தொடரில் கவனம் பெற்ற தோற்றம் ஆகியவற்றின் மூலம் திறமையான நடிகராக தன்னை நிலைநிறுத்தியுள்ள பாலாஜி சக்திவேல், இந்த புதிய முயற்சியின் மூலம் தனது கலைப்பயணத்தை மேலும் ஒரு படி முன்னேற்றியுள்ளார்.
எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முத்துராமன் இயக்கியுள்ள ‘ஆஃப் தி ரெக்கார்ட்’, ஒரு காவல்துறை அதிகாரிக்கும் ஒரு சாதாரண மனிதருக்கும் இடையே உருவாகும் உணர்வுப்பூர்வமான மோதல், பதட்டம் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் 12 நிமிட நேர அளவில் உருவாகியுள்ள இந்த பைலட் திரைப்படம், யதார்த்தமும் தீவிரமான உணர்வுகளும் கலந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக குறும்படங்கள் மற்றும் பல்வேறு காட்சிப்படுத்தல் முயற்சிகள் மூலம் தனது கலைத்திறனை வளர்த்துக் கொண்ட ஏ.ஆர். முத்துராமன், தனது சினிமா ஆர்வத்தையும் கதை சொல்லும் திறமையையும் இந்த படைப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தனது தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் ஃபிக்ஷன் ஸ்டுடியோ மூலம் புதிய கதைகளையும் படைப்புகளையும் தொடர்ந்து உருவாக்கி வரும் அவர், ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படத்தை தனது சினிமா பயணத்தின் முக்கிய மைல்கல்லாக கருதுகிறார்.
பாலாஜி சக்திவேலின் வித்தியாசமான நடிப்பும், ஏ.ஆர். முத்துராமனின் தீவிரமான கதை சொல்லலும் இணைந்துள்ள ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படம் குறித்து மேலும் பல அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.





