தமிழகத்தின் மறைந்திருக்கும் இயற்கை ரகசியங்கள்.. “வைல்ட் தமிழ்நாடு” செப்டம்பர் 7 முதல்!

தமிழகத்தின் காடுகள், மலைகள், கடற்கரைகள் மற்றும் அவற்றில் வாழும் அரிய வன உயிரினங்களை இதுவரை காணாத பார்வையில் பதிவு செய்துள்ள ‘வைல்ட் தமிழ்நாடு’ (Wild Tamil Nadu) ஆவணப்படம், செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பிவிஆர் சினிமாஸ் (PVR Cinemas) திரையரங்குகளில் வெளியாகிறது. சுமார் ஒரு மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படம், தமிழகத்தின் இயற்கை வளத்தையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பிரம்மாண்ட திரை அனுபவமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது.

சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) முயற்சியாக, ‘நேச்சர் இன்:ஃபோகஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு வனத்துறையின் ஆதரவோடு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட களப்பணியின் மூலம் பதிவு செய்யப்பட்ட அரிய காட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு, இந்த ஆவணப்படம் உருவாகியுள்ளது.

மலைப்பகுதிகள், அடர்ந்த காடுகள், விவசாய நிலங்கள், கடற்கரைப் பகுதிகள், பவளப்பாறைகள் மற்றும் வறண்ட நிலங்கள் என தமிழகத்தின் வெவ்வேறு இயற்கைச் சூழல்கள் இதில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பழந்தமிழ் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஐந்திணை கருத்தாக்கமான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு படத்தின் காட்சியமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

யானை, சிறுத்தை போன்ற அனைவருக்கும் பரிச்சயமான விலங்குகளுடன், செங்குரங்கு (Lion-tailed macaque), மின்மினிப் பூச்சிகள் மற்றும் அரிதாகக் காணப்படும் மெட்ராஸ் முள்ளெலி (Madras hedgehog) உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் வாழ்வியலும் இதில் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கையின் நுணுக்கமான தருணங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படத்தை இயற்கை மற்றும் வனவிலங்கு திரைப்படங்களுக்காக அறியப்படும் இயக்குநர் கல்யாண் வர்மா இயக்கியுள்ளார். நடிகர் அரவிந்த் சுவாமி தனது கம்பீரமான குரலில் இப்படத்திற்கு பின்னணி வர்ணனை வழங்கியுள்ளார். மூன்று முறை கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், கர்நாடக இசையின் பாரம்பரியத்தையும் மேற்கத்திய இசைக்கருவிகளின் ஒலியையும் இணைத்து பின்னணி இசையை உருவாக்கியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த திறமையான ஒளிப்பதிவாளர்கள் அடங்கிய குழுவினர், நான்கு ஆண்டுகள் பல்வேறு பகுதிகளில் களப்பணியில் ஈடுபட்டு, இயற்கையின் மாறுபட்ட முகங்களையும் வன உயிரினங்களின் அரிய தருணங்களையும் தங்கள் கேமராக்களில் பதிவு செய்துள்ளனர்.

திரைப்படம் மற்றும் அதன் பரவலான திரையரங்கு வெளியீடு குறித்து சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி ஆரத்தி கிருஷ்ணா பேசுகையில்,

“நமது இயற்கை பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் இதுபோன்ற சிறந்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ் லிமிடெட் பெருமிதம் கொள்கிறது. தமிழ்நாட்டின் வனப்பகுதிகளின் எழிலையும், அதன் பல்வேறு நிலப்பகுதிகளில் காணப்படும் அச்சரியமூட்டும் பல்லுயிர் சூழலையும் ‘வைல்ட் தமிழ்நாடு’ ஆவணப்படம் மிக நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளது. பிவிஆர் திரையரங்குகள் வாயிலாக இந்த ஆவணப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், இந்த கதைகள் அனைவரையும் எளிதில் சென்றடையச் செய்வதோடு, இயற்கை உலகின் மீது ஆழ்ந்த அன்பையும், அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களிடையே உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.

பல ஆண்டுகளாக காடுகள், மலைகள் மற்றும் பல்வேறு நிலப்பரப்புகளில் இரவு பகலாக மேற்கொள்ளப்பட்ட களப்பணியின் பலனாக உருவாகியுள்ள ‘வைல்ட் தமிழ்நாடு’, தமிழகத்தின் இயற்கை பாரம்பரியத்தை ஒரு சினிமா அனுபவமாக மாற்றுகிறது.

செப்டம்பர் 7 முதல் பிவிஆர் சினிமாஸ் திரையரங்குகளில் வெளியாகும் இப்படம், தமிழகத்தின் இயற்கை அழகையும் வனவிலங்குகளின் வாழ்க்கையையும் பெரிய திரையில் ரசிக்கும் வாய்ப்பை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. காடுகள் முதல் கடற்கரைகள் வரை, மலைகள் முதல் வறண்ட நிலப்பரப்புகள் வரை தமிழகத்தின் இயற்கை உலகை புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தும் இந்த ஆவணப்படம், திரையரங்க அனுபவத்திற்கே உரிய பிரம்மாண்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.