சென்னை: மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி வரும் ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு மொழி உரிமை தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு மொழி மறுஆக்கம் மற்றும் வெளியீட்டு உரிமைகளின் முழுமையான மற்றும் பிரத்யேக உரிமையாளராக தங்களை அறிவித்துள்ள ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்நிறுவனத்தை ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையேற்று நடத்தி வருகின்றனர்.
தங்களது மனுவில், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸ் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய தரப்பினர் யாரும் ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தை தெலுங்கு மொழியில் தயாரிக்கவோ, மறுஆக்கம் செய்யவோ அல்லது வெளியிடவோ கூடாது என நிரந்தரத் தடை உத்தரவு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே. ரவி ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து, எதிர்மனுதாரர்கள் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பை ஓடிடி தளங்களில் வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும், வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு படைப்பாக்க அல்லது வெளியீட்டு உரிமைகள் தொடர்பாக எந்த நபர், நிறுவனம், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் அல்லது ஓடிடி தளம் ஒப்பந்தங்களில் ஈடுபட்டாலும், அது அவர்களது சொந்த பொறுப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே கருதப்படும் என்றும், அத்தகைய ஒப்பந்தங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டதாக இருக்கும் என்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.





