“டோண்ட் டிரபிள் தி டிரபிள்” ஷஷாங்க் யேலேட்டி இயக்கத்தில் எஸ். எஸ். கார்த்திகேயா, ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை கால பைரவா. இந்த படத்தில் ஃபஹத் பாசில், சாரா பாலேகர், மகேஷ் மஞ்ச்ரேக்கர், சௌரப் சச்தேவ், திவ்யா பிள்ளை, வெங்கடேஷ் காகமனு, சுப்புராஜு, சஷாங்க் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் ஃபஹத் பாசில், வாழ்க்கையில் பணம் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்று நினைப்பவர். எப்படியாவது பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், பணக்காரர்களின் குழந்தைகளை கடத்தி பணம் பறிக்க திட்டமிடுகிறார். அப்படி ஒரு முயற்சியில் ஈடுபடும் போது, ஏற்கனவே உயிரிழந்துவிட்ட சிறுமி சாரா பாலேகரை கடத்தி அழைத்துச் செல்கிறார்.
தான் இறந்துவிட்டதை அறியாத சிறுமி திவ்யா, காணாமல் போன தனது பெற்றோரை தேடிக்கொண்டிருக்கிறார். அவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு ஃபஹத் பாசிலிடம் கேட்கிறார். ஆனால், தான் அழைத்துச் செல்வது உயிருள்ள குழந்தை அல்ல, ஒரு ஆன்மா என்பது ஃபஹத் பாசிலுக்கு தெரியாது. அவளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் அவரது திட்டம் என்ன ஆனது, சிறுமியின் பெற்றோருக்கு என்ன நடந்தது, ஒரு ஆன்மாவுடன் ஃபஹத் பாசில் மேற்கொள்ளும் பயணம் எந்த இடத்தில் முடிகிறது என்பதை ஃபேண்டஸி மற்றும் உணர்வுகளுடன் சொல்லும் படமே ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’.
சூரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஃபஹத் பாசில், தனது வழக்கமான இயல்பான நடிப்பால் மீண்டும் கவனம் ஈர்க்கிறார். அதிகப்படியான வசனங்களை நம்பாமல், முகபாவனைகள் மற்றும் உடல் மொழியின் மூலமே கதாபாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்துகிறார். பணத்தின் பின்னால் ஓடும் மனிதராகவும், சிறுமியுடன் பயணிக்கும்போது படிப்படியாக மாறும் மனிதராகவும் அவரது நடிப்பு கதைக்கு மிகப்பெரிய துணையாக அமைந்துள்ளது.
திவ்யாவாக நடித்திருக்கும் சாரா பாலேகர், படத்தின் மற்றொரு முக்கியமான பலம். குழந்தைகளுக்கே உரிய அப்பாவித்தனத்தையும், உலகத்தைப் பற்றிய அவர்களது கற்பனையையும் மிகவும் இயல்பாக வெளிப்படுத்துகிறார். குறிப்பாக மேஜிக் மீது அதிக ஆர்வம் கொண்ட சிறுமியாக, தான் ஒரு ஆன்மா என்பதை அறியாமல் சுற்றி வரும் காட்சிகளில் அவரது நடிப்பு மனதை வருடுகிறது. ஃபஹத் பாசிலுடன் அவர் பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் படத்தின் உணர்வுப்பூர்வமான பகுதிகளாக மாறுகின்றன.
அஸ்லம் பாய் கதாபாத்திரத்தில் மகேஷ் மஞ்ச்ரேகர், பிரதாப் கதாபாத்திரத்தில் செளரப் சச்தேவா, மல்லேஷாக வெங்கடேஷ் காகுமானு, சுப்பராஜாக கிருஷ்ணா, திவ்யாவின் தாயாக பல்லவி கதாபாத்திரத்தில் திவ்யா பிள்ளை, சஞ்சயாக எஸ்.எஸ். ஷஷாங்க் ஆகியோர் தங்களுக்கான கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டுள்ளனர். இவர்களின் பங்களிப்பு கதையின் நகர்வுக்கு தேவையான ஆதரவாக அமைந்துள்ளது.
பிராட் பிரான்சிஸின் ஒளிப்பதிவு படத்தின் ஃபேண்டஸி தன்மைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. குழந்தைகளின் உலகத்தை பிரதிபலிக்கும் வகையில் வண்ணமயமான காட்சிகளை உருவாக்கியிருப்பதோடு, கிராபிக்ஸ் காட்சிகளையும் இயல்பாக கதைக்குள் இணைத்திருக்கிறார். குறிப்பாக கற்பனை சார்ந்த காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.
கால பைரவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசை படத்தின் மென்மையான தருணங்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. கதையில் இருக்கும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான பகுதிகளுக்கு ஏற்ப இசை அதிகப்படியாக இல்லாமல் பயணிப்பது சிறப்பு.
ஃபஹத் பாசிலும் சிறுமியின் ஆன்மாவும் இணைந்து மேற்கொள்ளும் பயணத்தை மையமாகக் கொண்ட கதையில், தேவையற்ற நீளத்தை தவிர்த்து காட்சிகளை சீராக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி. முதல் பாதியில் இருக்கும் சுவாரஸ்யம் மற்றும் வேகத்தை தக்க வைக்கும் வகையில் எடிட்டிங் அமைந்துள்ளது.
கற்பனை கதைக்களத்தை வெறுமனே குழந்தைகளுக்கான படமாக உருவாக்காமல், அதற்குள் மனித உணர்வுகளையும் உறவுகளையும் கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஷஷாங்க் யேலேட்டி. குழந்தைகள் ரசிக்கக்கூடிய மேஜிக், நாய் குட்டி, நகைச்சுவை உள்ளிட்ட அம்சங்களுடன் பெரியவர்களும் ரசிக்கும் வகையில் உணர்வுப்பூர்வமான தருணங்களை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
சிறுமியின் பெற்றோர் எங்கே இருக்கிறார்கள், அவர்களை சூரி எப்படி கண்டுபிடிக்கப் போகிறார் என்ற கேள்வியை மையமாக வைத்து திரைக்கதையில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக சாரா பாலேகரின் ‘ஸ்னூபி’ நாய் குட்டியுடன் வரும் காட்சிகள் குழந்தைகளை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளன.
இருப்பினும், முதல் பாதியில் இருந்த சுறுசுறுப்பு இடைவேளைக்குப் பிறகு குறைந்து விடுகிறது. இரண்டாம் பாதியில் கதை மெதுவாக நகர்வதுடன், சில காட்சிகள் தேவைக்கு அதிகமாக நீளமாக இருப்பதால் சலிப்பு ஏற்படுகிறது. திரைக்கதையின் வேகம் குறைவது படத்தின் முக்கியமான குறையாக அமைந்துள்ளது.
அதே சமயம், ஃபஹத் பாசில் மற்றும் சாரா பாலேகர் இடையிலான அழகான கெமிஸ்ட்ரி, முதல் பாதியில் இடம்பெறும் கற்பனை காட்சிகள், நகைச்சுவை மற்றும் மேஜிக் தருணங்கள் படத்தை ரசிக்க வைக்கின்றன.
மொத்தத்தில், குழந்தைகளையும் பெரியவர்களையும் கவரும் ஃபேண்டஸி அம்சங்களுடன் உருவாகியிருக்கும் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’, முதல் பாதியில் ஈர்த்தாலும், இரண்டாம் பாதியின் மெதுவான திரைக்கதையால் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது.





