மிரட்டும் லுக்கில் துருவ் விக்ரம் – “ஜாக்கி” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என பெயரிடப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ள முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழ் சினிமாவில் தனது நான்காவது படைப்பாக இப்படத்தை உருவாக்குகிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் துருவ் விக்ரம், இதுவரை நடித்த படங்களிலிருந்து மாறுபட்டு முழுமையான கமர்ஷியல் கதைக்களத்தில் களமிறங்குகிறார்.

படத்தின் பெயருடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துருவ் விக்ரம் இதுவரை பார்க்காத வகையிலான ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். அதிரடியான ஆக்‌ஷன் படத்தின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், நேரடி ஆக்‌ஷன் காட்சிகளையும் காமிக் புக் வடிவிலான காட்சியமைப்பையும் ஒன்றாக இணைத்துள்ளது.

பிரவுன் நிற உடையில், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் தோன்றும் துருவ் விக்ரமின் தோற்றம் அவரது கதாபாத்திரம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அவரது கூர்மையான பார்வையும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் உடல்மொழியும் கதையின் பின்னணியில் ஒரு அதிரடியான கதாபாத்திரம் இருப்பதை உணர்த்துகின்றன. குறிப்பாக கேமராவை நோக்கி நீட்டியிருக்கும் அவரது கை போஸ்டருக்கு கூடுதல் மாஸ் தோற்றத்தை கொடுக்கிறது.

‘No Retakes Allowed’ என்ற டேக்லைனும், இந்தப் படம் ஆக்‌ஷன் மையப்படுத்தப்பட்ட கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருவதை வெளிப்படுத்துகிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ள காட்சியமைப்பு மற்றும் துருவ் விக்ரமின் புதிய லுக், இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்கி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ஜெயசூர்யா எஸ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜி.எம். சேகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பிரபல சண்டைப் பயிற்சியாளர் விக்ரம் மோர் பொறுப்பேற்றுள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்கி ஒளிப்பதிவு, ஜெயசூர்யா எஸ் படத்தொகுப்பு, ஜி.எம். சேகர் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் விக்ரம் மோர் சண்டைப்பயிற்சி ஆகிய பணிகளை மேற்கொள்கின்றனர்.

இப்படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் கவனிக்க, மார்க்கெட்டிங் பணிகளை ஃபர்ஸ்ட் ஷோ நிறுவனம் மேற்கொள்கிறது. தலைப்பும், துருவ் விக்ரமின் மாஸ் லுக்கும் வெளியாகியுள்ள நிலையில், ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.