வித்தியாசமான கதைக்களங்களையும், தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் சவாலான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை நிமிஷா சஜயன். தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் அவர், தனது தலைமுறையின் சிறந்த நடிகைகளில் ஒருவராக கவனம் பெற்றுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்திப் படமான ‘பபிதா சிங் ரிப்போர்ட்டிங்’ உள்ளிட்ட படங்களில் அவர் ஏற்ற மாறுபட்ட கதாபாத்திரங்கள், அவரது நடிப்புத் திறமைக்கு மேலும் வலு சேர்த்துள்ளன. அந்த வரிசையில் தற்போது ‘என்ன விலை’ திரைப்படமும் இணைந்துள்ளது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் மற்றும் பத்திரிகையாளர் திரையிடல்களில் கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பு படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
தான் ஏற்றுள்ள காஞ்சனா கதாபாத்திரம் குறித்து நிமிஷா சஜயன் கூறியதாவது:
“இயக்குநர் சஜீவ் என்னிடம் கதையைப் பகிர்ந்தபோது, எந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்பதை அவர் முதலில் சொல்லவில்லை. ‘நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள்’ என்று கூறினார். விஜயலட்சுமி, காஞ்சனா என இரண்டு கதாபாத்திரங்களுமே மிகவும் அழகாகவும், வலுவாகவும் எழுதப்பட்டிருந்தன. அதேபோல் ரிஷியின் கதாபாத்திரமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதனால், எந்தக் கதாபாத்திரம் எனக்கு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எனக்குள் இருந்தது. உண்மையைச் சொல்வதென்றால், எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டிருப்பேன். விஜியின் கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருந்தேன். அந்தக் கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதே நேரத்தில் காஞ்சனா கதாபாத்திரமும் என்னை வெகுவாக கவர்ந்தது. இறுதியில் நான் காஞ்சனாவாக நடிக்கப் போகிறேன் என்று சஜீவ் சொன்னபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அவரைக் கட்டிப்பிடித்து, ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டேன். இரண்டு கதாபாத்திரங்களும் அந்த அளவுக்கு சிறப்பாக எழுதப்பட்டிருந்ததால், அவர் என்னை எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப் போகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை.
‘இது உங்களுக்கான கதாபாத்திரம்’ என்று அவர் சொன்ன அந்த தருணம் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
‘என்ன விலை’ படத்தின் மிகப்பெரிய பலம், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான உணர்வுப்பூர்வமான பயணம் இருப்பதுதான். கருணாஸ் சாருடன் எனக்கு அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும், அவரது நடிப்பு அசாத்தியமானது. அதேபோல் விஜயலட்சுமி கதாபாத்திரமும் படத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளவரும் சிறப்பாக நடித்துள்ளார்.
பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் படம் மற்றும் எனது கதாபாத்திரம் குறித்து தெரிவித்த பாராட்டுகள் மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளன. இந்த கதாபாத்திரங்களை உயிரோட்டமாக உருவாக்கியதற்கான முழுப் பெருமையும் இயக்குநர் சஜீவுக்கே சேரும். ‘என்ன விலை’ திரைப்படம் ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நினைவில் நிற்கும் படமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
சமூக முக்கியத்துவம் கொண்ட பின்னணியில் உருவாகியுள்ள ‘என்ன விலை’, ராமேஸ்வரம் கடற்பகுதியில் பக்தர்கள் காணிக்கையாக கடலில் வீசும் நாணயங்களை சேகரித்து வாழ்க்கை நடத்தும் ஒரு சாதாரண மனிதனின் கதையை மையமாகக் கொண்டுள்ளது. வாழ்வாதாரத்திற்காக போராடும் அவர், தனது கண்ணியத்தைக் காப்பாற்ற எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இறுதியில் ஒரு முக்கியமான சட்டப் போராட்டமாக மாறுகின்றன.
கருணாஸ், நிமிஷா சஜயன், ஷாஷா சிவகுமார், விஜயலட்சுமி வீரமணி, சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை கலாமயா ஃபிலிம்ஸ் சார்பில் ஜிதேஷ் வி தயாரித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்க, ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சாரங் மேற்கொண்டுள்ளார்.
சமூகப் பிரச்சினையையும் மனித உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





