Insomniac’s Dream Creations தயாரிப்பில், இயக்குநர் மனோ வெ கண்ணதாசன் இயக்கியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ரசிகர்களிடம் கவனம் பெற்ற ‘இறுதிப்பக்கம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இளம் நடிகர் மணிகண்டன் வெளியிட்டுள்ளார்.
மர்மம், கொலை, விசாரணை எனப் பரபரப்பான அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரத்த வெள்ளத்தில் தலைகீழாகக் கிடக்கும் பெண், அவரைச் சுற்றிலும் சிதறிக் கிடக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் கருவிகள், அந்த இடத்தைக் கடந்து செல்லும் நீல நிற கார் எனப் பல மர்மமான அம்சங்கள் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ரத்தம் படர்ந்த பாதையைக் கடந்து செல்லும் கார், கொலையின் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மங்கள் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ‘இறுதிப்பக்கம் VOL.02 – FRESH BLOOD’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், படத்தின் திரில்லர் தன்மையை வெளிப்படுத்துகிறது.
முதல் பாகத்தில் மர்மம், விசாரணை மற்றும் உணர்வுப்பூர்வமான திருப்பங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், இரண்டாம் பாகத்திலும் விறுவிறுப்பான கதைக்களத்தைத் தேர்வு செய்துள்ளார். முந்தைய படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள இப்படம், புதிய கதாபாத்திரங்கள் மற்றும் மாறுபட்ட சம்பவங்களுடன் ரசிகர்களுக்கு மற்றுமொரு திரில்லர் அனுபவத்தை வழங்கத் தயாராகி வருகிறது.
ஒரு கொலையைச் சுற்றியே இப்படத்தின் கதை நகர்கிறது. நடந்த கொலையின் உண்மையான பின்னணியைக் கண்டறிய ஒரு தரப்பு தீவிரமாகச் செயல்படுகிறது. மறுபுறம், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது அடையாளம் வெளிப்படாமல் இருக்க ஆதாரங்களை மறைக்க முயற்சிக்கின்றனர். உண்மையைக் கண்டுபிடிக்கப் போராடும் தரப்புக்கும், குற்றத்தை மூடி மறைக்க முயலும் தரப்புக்கும் இடையே நடைபெறும் மோதல்களும் தந்திரங்களுமே படத்தின் விறுவிறுப்பான திரைக்கதைக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
விசாரணையின் போக்கில் அடுத்தடுத்து நிகழும் திருப்பங்களுடன், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தொடக்கம் முதல் இறுதிவரை பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தக்கவைக்கும் வகையில் மர்மங்களும் எதிர்பாராத சம்பவங்களும் திரைக்கதையில் இடம்பெற்றுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘குமார சம்பவம்’ உள்ளிட்ட தொடர்களின் மூலம் பிரபலமான குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் அபிஷேக் ஜோசப், சத்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவைக் கவனிக்க, ராம் பாண்டியன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜோன்ஸ் ரூபர்ட் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சென்னை, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், தற்போது படப்பிடிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இசை வெளியீடு, ட்ரெய்லர் வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





