பெண்களின் மாதவிடாய் பராமரிப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது. ZOY நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நிறுவனத்தின் இணை நிறுவனர் நடிகை சமந்தா ரூத் பிரபு, ZOY நிறுவனர் மகேஸ்வரி மூர்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், ஃபிட் செஃப் நிறுவனர் மற்றும் ஊட்டச்சத்து, ஆரோக்கியப் பயிற்சியாளரான ஷிதிஜா நஹதா, விளையாட்டு மற்றும் முழுமையான தடுப்பு உணவியல் நிபுணர் ஷைனி சுரேந்திரன், மகளிர் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் பத்மா ராமகிருஷ்ணன், டாக்டர் நரசா நாராயணி ஆகியோரும் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
‘மாதவிடாய் காலத்தைத் தாண்டிய ஆரோக்கியம்’ (Wellness Beyond Your Period) என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பெண்களின் உடல்நலத்தில் ஹார்மோன்களின் பங்கு, அந்தரங்கப் பகுதி சுகாதாரம், மாதவிடாய் பராமரிப்புப் பொருட்களின் பாதுகாப்பு, சரியான ஊட்டச்சத்து மற்றும் வயதுக்கு ஏற்ப பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மாதவிடாய் காலப் பராமரிப்புடன் மட்டுமின்றி, பெண்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதன் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டது.
ZOY நிறுவனத்தின் நிறுவனர் மகேஸ்வரி மூர்த்தி பேசுகையில், ஜவுளித் துறையில் 16 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைப் பெற்றுள்ள தனது பின்னணியில், பெண்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான மாதவிடாய் பராமரிப்புப் பொருட்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நிறுவனத்தைத் தொடங்கியதாகத் தெரிவித்தார்.
நடிகையும் நிறுவனத்தின் இணை நிறுவனருமான சமந்தா ரூத் பிரபு, பெண்கள் தங்களது உடல்நலம் குறித்து போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், அன்றாடம் பயன்படுத்தும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை ஆராய்ந்து தேர்வு செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தினார். பெண்கள் தங்களது உடல் நலத் தேவைகளைப் புரிந்துகொண்டு, சரியான தகவல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
பெண்களின் பல்வேறு தேவைகளைக் கருத்தில் கொண்டு, மூலிகைகள் சேர்க்கப்பட்ட சானிட்டரி நாப்கின்கள், பாக்டீரியா எதிர்ப்புத் தொழில்நுட்பம் கொண்ட நாப்கின்கள், மூலிகை வெல்னஸ் லைனர்கள், ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் உள்ளாடைகள், மறுபயன்பாட்டுக்கான மாதவிடாய் கப் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை ZOY நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மாதவிடாய் பராமரிப்புப் பொருட்களை வழங்குவதுடன், பெண்களின் ஒட்டுமொத்த நலன், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தையும் முன்னிறுத்துவதே இம்முயற்சியின் முக்கிய நோக்கம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெண்கள் தங்களது உடல்நலம் குறித்து வெளிப்படையாகப் பேசுவதற்கும், சரியான தகவல்களைப் பெறுவதற்கும், தங்களது தேவைகளுக்கு ஏற்ற பாதுகாப்பான பராமரிப்பு முறைகளைத் தேர்வு செய்வதற்கும் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உதவும் என நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.





