நாகார்ஜுனாவின் 100வது படமான “கிங் 100” – அசோக் செல்வனின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது!

நடிகர் நாகார்ஜுனா அக்கினேனியின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாகவும், அவரது 100வது திரைப்படமாகவும் உருவாகி வருகிறது ‘கிங் 100’ (King 100). ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ர. கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். இவரது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும்.

பிரபல நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடிக்கும் இப்படத்தின் கதாபாத்திர அறிமுகங்கள் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், இப்படத்தில் ‘கர்ணா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அசோக் செல்வனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளது.

இந்தப் போஸ்டரில் அசோக் செல்வன் இதுவரை வெளிப்படுத்தாத முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார். மெரூன் நிறச் சட்டை, நீண்ட தலைமுடி, அடர்த்தியான தாடி என வித்தியாசமான தோற்றத்துடன் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவரது தோரணை கதாபாத்திரத்தின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. கையில் சிகரெட், அருகில் கிடக்கும் காவல்துறை சீருடை, முன்னால் வைக்கப்பட்டுள்ள சதுரங்கப் பலகை மற்றும் அதன் ராஜா காய் ஆகியவை போஸ்டருக்கு கூடுதல் மர்மத்தையும் சுவாரசியத்தையும் சேர்க்கின்றன. இருண்ட பின்னணியும் புகை சூழ்ந்த காட்சியமைப்பும் கர்ணா கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்துகின்றன.

பிறந்தநாள் சிறப்புப் பரிசாக வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக், அசோக் செல்வனின் நடிப்புப் பயணத்தில் மற்றுமொரு வித்தியாசமான முயற்சியாக அமைந்துள்ளது. அவரது கதாபாத்திரத்தின் பின்னணி என்ன, கதையில் அது எத்தகைய முக்கியத்துவம் பெறுகிறது என்ற கேள்விகளையும் ரசிகர்களிடம் உருவாக்கியுள்ளது.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொள்கிறார். நவீன் நூலி படத்தொகுப்பையும், N. சதீஷ்குமார் தயாரிப்பு வடிவமைப்பையும் கவனிக்கின்றனர்.

நாகார்ஜுனா, தபு, அசோக் செல்வன் என முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் இணைந்துள்ள ‘கிங் 100’ திரைப்படம், அடுத்தடுத்து வெளியாகும் விளம்பரப் போஸ்டர்கள் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

இப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.