பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் Asian Future பிரிவில் திரையிடத் தேர்வானது. இப்படத்தின் உலகளாவிய முதல் திரையிடல் (World Premiere) விழாவில் இரண்டு காட்சிகளாக நடைபெற்றது.
இந்தச் சிறப்பான நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் பிரேமா செழியன் மற்றும் சிங்கப்பூரில் கல்வி பயின்று வரும் அவரது மகள் அதிதா செழியன் ஆகியோர் பங்கேற்றனர்.
டோக்கியோவில் நடைபெற்ற இரண்டு காட்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இரு திரையிடல்களும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக அமைந்தன. ஜப்பானிய ரசிகர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் படத்தை ரசித்துப் பார்த்தனர். திரைப்படம் நிறைவடைந்ததும் பார்வையாளர்கள் எழுப்பிய பலத்த கைதட்டல்கள் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளித்தன.
திரையிடலுக்குப் பிறகு நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் படத்தின் கதைக்களம், உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்குப் பிரேமா செழியன் தமிழிலும், அதிதா செழியன் ஆங்கிலத்திலும் பதிலளித்தனர். அவர்களின் கருத்துகள் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பார்வையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டன.
விழாவின் தேர்வுக் குழுவினர், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் ‘காகித மலர்’ திரைப்படத்தின் தனித்துவமான உருவாக்கத்தைப் பாராட்டினர்.
டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழு உறுப்பினர் கென்ஜி இஷிசாகா (Kenji Ishizaka), படத்தைப் பாராட்டிப் பேசுகையில், டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகக் குறைந்த செலவிலும் தரமான திரைப்படங்களை உருவாக்க முடியும் என்பதற்கு ‘காகித மலர்’ சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டார். உலகத் தரத்திலான படைப்பாக இது அமைந்துள்ளதாகவும், திரைப்பட உலகில் கண்டறியப்படும் அரிய பொக்கிஷங்களில் ஒன்றாக இப்படத்தைப் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியத் திரைப்படங்கள் என்றாலே பாலிவுட் படங்கள் மட்டுமே பலரது நினைவுக்கு வரும் நிலையில், அதற்கு அப்பாற்பட்டு இந்தியாவில் உருவாகும் பல்வேறு மொழிகளின் தனித்துவமான படைப்புகளையும் சர்வதேச ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் இப்படத்தைத் தேர்வு செய்ததாகவும் அவர் கூறினார். தங்களது எதிர்பார்ப்பைத் தாண்டி படம் பார்வையாளர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் பாராட்டினார்.
திரைப்பட விமர்சகர் கேட்டி ரைஃப் (Katie Rife) தனது பாராட்டில், ‘காகித மலர்’ திரைப்படம் இனிமையான உணர்வுகளையும், இலக்கியத் தன்மை கொண்ட கதை சொல்லலையும் உள்ளடக்கிய தமிழ் திரைப்படமாக டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் மற்ற படைப்புகளிலிருந்து தனித்துவமாகத் திகழ்ந்து தனது கவனத்தை ஈர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தின் சர்வதேச வரவேற்பைத் தொடர்ந்து, ஜப்பான் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர்களும் ‘காகித மலர்’ திரைப்படத்தைத் தங்களது பகுதிகளில் வெளியிடவும் விநியோகிக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தப் படத்தின் வெற்றிகரமான உருவாக்கத்திற்குப் பங்களித்த படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயக், இயக்குநர் செழியனின் உதவியாளர்கள் பிச்சுமணி, ஆர்.பி. ராஜா, ராஜ்கிரண், ஜோசப் இருதயராஜ், பேச்சியப்பன், நடிகர் பராந்தக சோழன், நடிகை ஜனனி செண்பகா உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர் பிரேமா செழியன் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரெழுத்து பதிப்பகத்தின் சுதிர், அன்னம் பதிப்பகத்தின் கதிர் மற்றும் பபாசி அமைப்பினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த இந்த அங்கீகாரம், பாராட்டுகள் மற்றும் வரவேற்பு அனைத்தையும் தனது அன்பிற்குரிய செழியனின் கலைப்பயணத்திற்குச் சமர்ப்பிப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாக உருவாகியுள்ள செழியனின் ‘காகித மலர்’, தற்போது சர்வதேச ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளதுடன், உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறது.





