அர்ஜுனின் அதிரடி என்ட்ரியால் மிரட்டும் “பொலிமேரா 3” – வெளியானது புதிய கிளிம்ப்ஸ்!

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக அமைந்த ‘பொலிமேரா’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து, மூன்றாம் பாகமாக உருவாகியுள்ள ‘பொலிமேரா 3’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் முக்கியமான ‘வீராவி’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சர்ஜாவின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

வம்சி நந்திபாடி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வம்சி நந்திபாடி, ஏசியன் குழுமத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி. நிறுவனத்தைச் சேர்ந்த பரத் நரங்குடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார். டாக்டர் அனில் விஸ்வநாத் இயக்கும் இப்படம், முந்தைய பாகங்களைக் காட்டிலும் இன்னும் பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்ட அர்ஜுனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதுவரை அவர் ஏற்றிராத முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் முதல் பார்வை கிளிம்ப்ஸ் மர்மம் நிறைந்த சூழலுடன் தொடங்கி, பார்வையாளர்களை ஒரு வித்தியாசமான உலகிற்குள் அழைத்துச் செல்கிறது. இருள் சூழ்ந்த கோயில் பின்னணியில் ஆரம்பிக்கும் காட்சிகள், அமாவாசை இரவின் அமானுஷ்யத் தன்மையை மெல்ல வெளிப்படுத்துகின்றன. மகாவிஷ்ணு, சிவபெருமான், அனந்த பத்மநாப சுவாமி ஆகியோரின் ஆன்மிகக் காட்சிகளும் இடம்பெற்று, பக்தி, மர்மம் மற்றும் அமானுஷ்யம் கலந்த கதைக்களத்தை உணர்த்துகின்றன.

நடிகர் சத்யம் ராஜேஷ், கொமரையா என்ற கதாபாத்திரத்தில் மாந்திரீகச் சடங்குகளை மேற்கொள்ளும் காட்சிகள் படத்தின் மர்மத்திற்கும் திகிலுக்கும் வலு சேர்க்கின்றன. விறுவிறுப்பான காட்சிகளும், பின்னணி அமைப்பும் அடுத்து என்ன நிகழப்போகிறது என்ற ஆவலைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.

இந்த மர்மமான காட்சிகளுக்குப் பிறகு, ரசிகர்கள் எதிர்பார்த்த ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் பிரம்மாண்ட அறிமுகம் இடம்பெறுகிறது. ‘வீராவி’ என்ற கதாபாத்திரத்தில் வாளுடன் கம்பீரமாகத் தோன்றும் அர்ஜுனின் தோற்றமும், கூர்மையான பார்வையும், மிடுக்கான உடல்மொழியும் அவரது கதாபாத்திரத்தின் வலிமையை வெளிப்படுத்துகின்றன. இந்த அறிமுகக் காட்சி கிளிம்ப்ஸின் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது.

இப்படத்தில் காமாட்சி பாஸ்கர்லா, பாலாதித்யா, கெட்டப் ஸ்ரீனு, ராகேந்து மௌலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வம்சி நந்திபாடி மற்றும் பரத் நரங் இணைந்து தயாரிக்கும் ‘பொலிமேரா 3’ திரைப்படத்திற்கு டாக்டர் அனில் விஸ்வநாத் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்குகிறார். சித்தார்த் ஒளிப்பதிவுப் பணிகளையும், கிருஷ்ண பிரசாத் இசையமைப்புப் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

மர்மம், ஆன்மிகம், அமானுஷ்யம் மற்றும் அதிரடி ஆக்‌ஷன் எனப் பல அம்சங்களை உள்ளடக்கியுள்ள ‘பொலிமேரா 3’, அர்ஜுனின் புதிய அவதாரத்துடன் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.