ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘மரகத நாணயம் 2’ படத்தின் முதல் பார்வை போஸ்டரைத் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் பாகம் வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படத்தின் அறிவிப்பு ரசிகர்களிடையே மீண்டும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ARK சரவன். வித்தியாசமான கதைக்களம், நகைச்சுவை, சாகசம் மற்றும் அமானுஷ்ய அம்சங்கள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து அவர் உருவாக்கிய இப்படம் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்றது. சாபம் நிறைந்த மரகதக் கல், சேட்டைகள் செய்யும் ஆவிகள் எனப் புதுமையான கற்பனையுடன் அமைந்திருந்த முதல் பாகத்திற்குத் தனி ரசிகர் வட்டமும் உருவானது.
தற்போது அதன் இரண்டாம் பாகத்தை அதே இயக்குநர் ARK சரவன் எழுதி இயக்கியுள்ளார். வெளியீட்டிற்குத் தயாராகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெளியாகியுள்ளது.
படத்தின் இயக்குநர் ARK சரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’மரகத நாணயம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கிட்டத்தட்ட மீண்டும் இடம்பெற்றுள்ளனர். ஆதி, பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி, டேனியல் ஆனே போப், முனிஷ்காந்த், அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் மற்றும் முருகானந்தம் சார் எனப் பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
இவர்கள் ஒவ்வொருவரும் இந்தக் கதையில் எப்படி கனெக்ட் ஆகிறார்கள், எந்த இடத்தில் அனைவரும் ஒன்றிணைகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு படம் பார்க்கும்போது சர்ப்ரைஸாக இருக்கும். முதல் பாகத்தில் ரசிகர்கள் ரசித்த அதே நகைச்சுவை, சாகசம், ஆக்ஷன் என அனைத்தும் இரண்டாம் பாகத்திலும் அப்படியே இருக்கும். மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களும் உள்ளது.
டிரெய்லரில் படத்தின் சிறிய முன்னோட்டம் வெளியாகும். அதன்பிறகு, படம் பார்க்கும்போது இன்னும் பல ஆச்சரியங்கள் ரசிகர்களுக்காகக் காத்திருக்கின்றன. முதல் பாகத்தில் நிக்கியின் கதாபாத்திரம் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. அதேபோல், இந்தப் பாகத்திலும் அவருடைய கதாபாத்திரம் வலுவானதாகவும் ஸ்பெஷலாகவும் இருக்கும். படம் வெளியாகும்போது அதை ரசிகர்கள் தெரிந்துகொள்வார்கள்” என்றார்.
மரகத நாணயம் 2’ திரைப்படத்தை சுதன் சுந்தரம், தேவ், கே.வி. துரை, மனிஷ் சிங்கள் மற்றும் துர்கம் சௌத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் RDC மீடியா ஆகிய நிறுவனங்கள் இப்படத்தின் தயாரிப்பில் பங்கேற்றுள்ளன.
இப்படத்தில் ஆதி மற்றும் பிரியா பவானி சங்கர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், நிக்கி கல்ராணி, முனிஷ்காந்த், ஆனந்தராஜ், டேனியல் ஆனி போப், அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அதே நடிகர்கள் கூட்டணியுடன் உருவாகியுள்ள ‘மரகத நாணயம் 2’, நகைச்சுவை மற்றும் சாகசம் நிறைந்த மற்றுமொரு பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





