‘நாய் சேகர்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கிஷோர் ராஜ்குமார், எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’. காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த கலகலப்பான பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள இதில், பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.
பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளைத் தயாரித்து நடத்துவதிலும், திறமையாளர்களை நிர்வகிப்பதிலும் பெயர் பெற்ற நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains) நிறுவனம், தற்போது திரைப்படத் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் முதல் திரைப்படமாக ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ உருவாகியுள்ளது. கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
கிஷோர் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்க, மலையாளத் திரையுலகில் பிரபலமானவரும் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானவருமான அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கே.எஸ். ரவிகுமார், பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், சித்தப்பு சரவணன், விநோதினி வைத்தியநாதன், லொள்ளு சபா மனோகரன், CWC மோனிஷா பிளஸ்ஸி, வாட்ஸப் மணி, நக்கலைட்ஸ் ரஞ்சித் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநரும் நாயகனுமான கிஷோர் ராஜ்குமார், “வெறும் 29 நாட்களில் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படப்பிடிப்பை முடித்துள்ளோம். குண்டாக இருப்பவர்களை நகைச்சுவை வேடங்களில் சித்தரித்து நிறைய படங்கள் வந்துள்ள நிலையில், உடல் எடை அதிகமாகக் கொண்ட பாத்திரத்தை நாயகனாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது. அந்த வேடத்தில் நானே நடிப்பது மகிழ்ச்சி. அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் வைகையில் இப்படம் உருவாகியுள்ளது, தொடக்கம் முதல் இறுதி வரை கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் இந்த திரைப்படம் இருக்கும்,” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. படம் முழுக்க ஃபீல் குட் உணர்வை ரசிகர்களுக்கு தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜோடி பொருத்தம் குறித்து பேசும் இந்த கலகலப்பான படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். மிகவும் திறமையான நடிகை என பெயரெடுத்த அன்ன பென் உடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி,” என்றார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும் இணை எழுத்தாளராகவும் பிரவீன் பாலு பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பை ராம் பாண்டியன் மேற்கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ் கதாநாயகனாக அறிமுகமான ‘நாய் சேகர்’ திரைப்படத்திலும் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் இடம்பெறும் கலகலப்பான பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஸ்ரீ சசிகுமார் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். கிருத்திகா சேகர் ஆடை வடிவமைப்பையும், எஸ். என். அஸ்ரப் மற்றும் நரேஷ் தினகரன் நிர்வாகத் தயாரிப்புப் பணிகளையும் கவனித்துள்ளனர்.
காதல், நகைச்சுவை, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு எனப் பல அம்சங்களுடன் தயாராகியுள்ள ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’, நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படமாக வெளியாகிறது. கிஷோர் ராஜ்குமார் இயக்கி நடித்துள்ள இப்படம் டிசம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.





