‘யாத்திசை’ திரைப்படத்தின் மூலம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தரணி ராசேந்திரன், தனது இரண்டாவது படைப்பாக ‘டெத் ரயில்வே’ என்ற வரலாற்றுத் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். தனது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகளை அவர் வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற 1944ஆம் ஆண்டின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அப்போது ஜப்பானியப் படைகள் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறிய சூழலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் இந்திய வீரர்கள் எதிர்கொண்ட போராட்டங்களையும், அதிகம் அறியப்படாத வரலாற்றுச் சம்பவங்களையும் இப்படம் திரையில் பதிவு செய்யவுள்ளது. போர் பின்னணியுடன் உணர்வுபூர்வமான காதலையும் இணைத்து இந்தக் கதையை இயக்குநர் உருவாக்கியுள்ளார்.
இப்படத்தில் சசிகுமார் இந்திய தேசிய ராணுவ அதிகாரியாக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமுத்திரக்கனி, சேயோன், கிஷோர், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெறுகிறார். அனுபவமும் திறமையும் கொண்ட நடிகர்கள் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘யாத்திசை’ படத்தில் வரலாற்றுப் பின்னணியைத் தனித்துவமான காட்சிமொழியில் வெளிப்படுத்திய தரணி ராசேந்திரன், தற்போது இன்னும் விரிவான கதைக்களத்துடன் ‘டெத் ரயில்வே’ படத்தை இயக்கி வருகிறார். வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகள், 1944ஆம் ஆண்டின் காலகட்டத்தை மீண்டும் உருவாக்குவதற்காகப் படக்குழு மேற்கொண்டுள்ள பிரம்மாண்டமான முயற்சியையும் நுணுக்கமான கலைப்பணிகளையும் வெளிப்படுத்துகின்றன.
ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜெ. கமலக்கண்ணன் இப்படத்தைத் தயாரிக்கிறார். கதையை எழுதி இயக்கும் பொறுப்பையும் தரணி ராசேந்திரனே ஏற்றுள்ளார். சர்தக் கல்யாணி இசையமைக்க, ஏ.சி. சார்லஸ் ராஜ் கூடுதல் இசையமைக்கிறார். ஆர். சேதுமுருகவேல் ஜெகநாதன் ஒளிப்பதிவையும், மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.
மாலதி நாராயணன் இணை இயக்குநராகவும், வீரமணி கணேசன் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், லிவி ஜேம்ஸ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். மிரட்டல் செல்வா சண்டைப் பயிற்சியை மேற்கொள்கிறார். சரவணன் ராமச்சந்திரன் ஒலி வடிவமைப்பையும், கே.சி. பூபதி ராஜா ஒலி கலவையையும் கவனிக்கின்றனர். டி.எஸ். ஹரி ஹர சுதீன் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளில் ஈடுபடுகிறார்.
மேலும், பாடலாசிரியர் நெய்தல், ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரீ நிஷா, கலரிஸ்ட் பராஜிதர் ஆகியோரும் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். பி.ஜே. ஆகாஷ் மற்றும் வெங்கி சந்திரசேகர் விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றுகின்றனர். குமரன் கே. புகைப்படக் கலைஞராகவும், நாகராஜ் செல்வம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், திருநீலகண்டன் ஜி. தயாரிப்பு நிர்வாகியாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் மறைக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவங்கள், வலுவான நடிகர் பட்டாளம், காதல் மற்றும் போர்க்கள உணர்வுகள் எனப் பல அம்சங்களுடன் உருவாகும் ‘டெத் ரயில்வே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் தற்போது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.





