மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘இருமுடி கட்டு’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், ‘காவேரி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அன்பான மனைவி, பாசமிக்க தாய் என குடும்பத்தின் உணர்வுகளை தன்னுள் சுமந்து நிற்கும் கதாபாத்திரமாக காவேரி வடிவமைக்கப்பட்டுள்ளது. ரவி தேஜா மற்றும் பிரியா பவானி சங்கர் இடையேயான அன்பும் நெருக்கமும் படத்தின் புரமோஷன் காட்சிகள் வாயிலாகவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
குடும்ப உறவுகள், அன்பு, நம்பிக்கை மற்றும் மனமாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் தந்தை – மகள் உறவும் முக்கிய இடம் பெறுகிறது. இதனால் ‘காவேரி’ கதாபாத்திரம் கதையின் உணர்வுப்பூர்வமான பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
’இருமுடி கட்டு’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பிரியா பவானி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “காவேரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான கதாபாத்திரம். இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது, சிவா நிர்வாணா உருவாக்கியிருந்த உணர்வுப்பூர்வமான உலகத்தைப் புரிந்துகொண்டேன். இப்படிப்பட்ட நேர்மையான மற்றும் வலிமையான கதையில் நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் உறவுகளில் நிறைய அன்பும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் இருக்கின்றன. அதனால் காவேரி கதாபாத்திரம் எனக்கும் ஸ்பெஷல்”
”ரவி தேஜா சாருடன் பணியாற்றியது மிகவும் சிறப்பான அனுபவம். எல்லோருடனும் அன்பாகவும் இயல்பாகவும் பழகினார். அதனால் எங்களுக்கும் நடிப்பது எளிதாகவும் மகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகள் குறித்து சிவா மிகவும் தெளிவாக இருந்தார். அவரது வழிகாட்டுதலுடன் பணியாற்றியது அழகான அனுபவம்”.
மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “படப்பிடிப்பு முடிந்தபோது, இந்த திரைப்படத்தைத் தாண்டியும் நாங்கள் எவ்வளவு விஷயங்களை எடுத்துச் சென்றிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். ஏராளமான காட்சிகளில் நடித்தோம், ஆயிரக்கணக்கான நினைவுகளை உருவாக்கினோம், எங்களுக்குள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய பல நகைச்சுவையான தருணங்களைப் பகிர்ந்துகொண்டோம், நிறைய சிரித்தோம். நாம் பணியாற்றும் மனிதர்கள், நம்முடன் எடுத்துச் செல்லும் நினைவுகளின் முக்கியமான பகுதியாக மாறிவிடும் பயணங்களில் இதுவும் ஒன்று.
இந்தத் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பை வழங்கிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும், குறிப்பாக தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி சார், ஒய். ரவி சங்கர் சார் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான மற்றும் பக்தி சார்ந்த உலகத்துடன் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை இணைந்திருக்கும் விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தத் திரைப்படத்தையும், அதன் கதாபாத்திரங்களையும், நாங்கள் இதில் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளையும் ரசிகர்கள் தங்களுடன் இணைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
இப்படத்தில் சாய் குமார், பேபி நக்ஷத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரவீன் புடி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சாஹி சுரேஷ் தயாரிப்பு வடிவமைப்பையும், நரேஷ் பாபு பி. திரைக்கதை ஒருங்கிணைப்புப் பணிகளையும் கவனித்துள்ளனர்.
டி-சீரிஸ் பிலிம்ஸ் சார்பில் குல்ஷன் குமார், பூஷன் குமார் மற்றும் டி-சீரிஸ் பிலிம்ஸ் இப்படத்தை வழங்குகின்றனர். சிவ் சனானா இணைத் தயாரிப்பாளராகவும், நீரஜ் கல்யாண் டி-சீரிஸின் தலைவராகவும், செர்ரி தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றுகின்றனர்.
மாஸ் மகாராஜா ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் இயக்குநர் சிவா நிர்வாணா கூட்டணியில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’, குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் பக்தியை இணைத்துச் சொல்லும் படைப்பாக உருவாகியுள்ளது. திரைப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





