நாகார்ஜுனா 100… ர.கார்த்திக் கூட்டணியில் பிரம்மாண்ட “கிங் 100”!

‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிய இயக்குநர் ர. கார்த்திக், தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நாகார்ஜுனாவின் 100வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் படத்திற்கு ‘கிங் 100 – KING 100’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நாகார்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளையில், ‘கிங் 100’ திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘உதயம்’, ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’, ‘குபேரா’, ‘கூலி’ உள்ளிட்ட படங்களின் வாயிலாக தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமான நாகார்ஜுனா, தனது நீண்ட திரைப்பயணத்தின் 100வது படத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரம்மாண்டமான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வரும் ‘கிங் 100’ திரைப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் சார்பில் அக்கினேனி குடும்பத்தினர் தயாரித்து வருகின்றனர். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

வெளியாகியுள்ள க்ளிம்ப்ஸ், நாகார்ஜுனாவின் திரை ஆளுமையையும், அவரது கதாபாத்திரத்தின் தனித்துவத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அவரது தோற்றம், வசன உச்சரிப்பு மற்றும் திரையில் வெளிப்படுத்தும் கம்பீரம் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.

நாகார்ஜுனாவின் 100வது திரைப்படம் என்பதால், அவரை மையப்படுத்தி இயக்குநர் ர. கார்த்திக் உருவாக்கியுள்ள காட்சிகள் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக க்ளிம்ப்ஸில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் உரையாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

ர. கார்த்திக் – நாகார்ஜுனா கூட்டணியில் உருவாகும் இந்தப் படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான கமர்ஷியல் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறந்தநாள் பரிசாக வெளியான க்ளிம்ப்ஸை நாகார்ஜுனாவின் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி, சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

நாகார்ஜுனாவின் 100வது திரைப்படம் என்ற சிறப்புடன் உருவாகி வரும் ‘கிங் 100’, டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் விளம்பரப் பணிகள் மீதான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.