“டயங்கரம்” படப்பிடிப்பு நிறைவு… விரைவில் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘டயங்கரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. டிஜிட்டல் உலகில் பிரபலமானவராகவும், ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவருமான வி.ஜே. சித்து, இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில் நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், ‘ஆதித்யா’ கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை பி. தினேஷ் கிருஷ்ணன் கவனித்துள்ள நிலையில், இசையை சித்து குமார் அமைத்துள்ளார். படத்தொகுப்பை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக ஏ. கீர்த்தி வாசன் பணியாற்றியுள்ளார்.

இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் கனவுகள், நட்பு, நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் தங்களது அடையாளத்தைத் தேடும் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள முழுநீள கமர்ஷியல் எண்டர்டெய்னராக ‘டயங்கரம்’ வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்குகிறது. அதேபோல், படத்தின் இசை ஆல்பத்தை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட உள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது பின்னணி இசை, டப்பிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.