விமல் – ஸ்ரேயா – சத்யன் கூட்டணியில் காமெடி கலாட்டா – “சண்டக்காரி”!

‘த்ரிஷ்யம்’ படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் உருவாக்கிய கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘சண்டக்காரி’. ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், காதல், நகைச்சுவை, மோதல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

லண்டனை பின்னணியாகக் கொண்டுள்ள இப்படத்தின் கதை, அங்கு செயல்பட்டு வரும் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தைச் சுற்றி நகர்கிறது. ‘சிவாஜி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற ஸ்ரேயா, அந்த நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியர் கதாபாத்திரத்தில் விமல் நடித்துள்ளார்.

வேலை சூழலில் அதிகாரி மற்றும் ஊழியர் என இருவரும் வெவ்வேறு நிலைகளில் இருப்பதால், அவர்களுக்கிடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. இந்த மோதல்களுக்குள் காதல், கோபம், ஈகோ உள்ளிட்ட உணர்வுகள் கலப்பதுடன், எதிர்பாராத சம்பவங்களும் திருப்பங்களும் கதையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகின்றன.

விமல் – ஸ்ரேயா இடையேயான இந்த சண்டையில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்தில் சத்யன் நடித்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ளும் அவரது கதாபாத்திரம், படத்தின் நகைச்சுவை பகுதிகளுக்கு முக்கிய பங்களிப்பாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது. விமல், ஸ்ரேயா மற்றும் சத்யன் இணையும் காட்சிகள் ரசிகர்களுக்கு கலகலப்பான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபு முக்கியமான குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர். விஜயா மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரேன் மனோகர் நகைச்சுவை வேடத்தில் இடம்பெற்றுள்ளார்.

மேலும், ‘கடலோர கவிதைகள்’ புகழ் ரேகா, ‘மஹதீரா’ படத்தின் வில்லன் தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். அம்ரீஷ் இசையமைக்க, குருதேவ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பையும், ஐய்யப்பன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சண்டைக் காட்சிகளுக்கு கணல் கண்ணன் சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். ஹபீப் நடன இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.

காதலை மையமாகத் தொடங்கி, மோதல்களால் பரபரப்பாகி, நகைச்சுவையால் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ‘சண்டக்காரி’ உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. விமல் – ஸ்ரேயா இணையும் புதிய கூட்டணி மற்றும் சத்யனின் காமெடி கலாட்டா ஆகியவை படத்தின் முக்கிய எதிர்பார்ப்புகளாக அமைந்துள்ளன.

குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள ‘சண்டக்காரி’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.