இளம் முன்னணி நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார். காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
அசோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள நிலையில், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவை கௌதம் ராஜேந்திரன் மேற்கொண்டுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.
ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான ‘ஆசை வரமே’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
காதல் மற்றும் அழகான உணர்வுகளை திரையில் கொண்டாட தயாராகியுள்ள ‘அன்பில் அவன்’, செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.





