ஃபீல் குட் ரொமான்டிக் காமெடி… “ஹைக்கூ” அக்டோபர் 23 ரிலீஸ்

ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு இருந்து வரும் நிலையில், அந்த வரிசையில் புதிய படைப்பாக ‘ஹைக்கூ’ திரைப்படம் உருவாகியுள்ளது. இளமைத் துள்ளல், காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களை கலந்து உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சுமார் 145 விநாடிகள் கொண்ட டிரெய்லரில் கல்லூரி வாழ்க்கை, இளமைத் துடிப்பு, காதல் மற்றும் நகைச்சுவை சம்பவங்கள் என படத்தின் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்கள் மட்டுமே பயிலும் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் மாணவனாக மனோ சேர்வதால் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளை மையமாகக் கொண்டு கதை நகர்வது டிரெய்லர் மூலம் தெரிய வருகிறது.

மனோவைச் சுற்றி நடக்கும் கல்லூரி கலாட்டாக்கள், கதாபாத்திரங்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி, நகைச்சுவை காட்சிகள் மற்றும் காதலைத் தாண்டிய உணர்வுப்பூர்வமான தருணங்கள் என பல அம்சங்களை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. வண்ணமயமான காட்சியமைப்பும் இளம் தலைமுறையை கவரும் வகையிலான பொழுதுபோக்கு அம்சங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

‘கோர்ட்: ஸ்டேட் Vs நோபடி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ஸ்ரீதேவி, ‘ஹைக்கூ’ படத்திலும் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவரும் வகையில் நடித்துள்ளார். அதேபோல் ஃபெமினா ஜார்ஜின் திரைத் தோற்றமும் நடிப்பும் படத்திற்கு கூடுதல் ஈர்ப்பை கொடுத்துள்ளது. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோரின் கூட்டணி படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது.

‘ஹைக்கூ’ குறித்து நடிகர் ஏகன் பகிர்ந்து கொண்டதாவது, “இது ஒரு ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம். ஆனால், இதற்குள் ஒரு ஆழமான கருத்தும் இருக்கிறது. ‘டோரதி’ படம் பார்த்த பிறகு மற்றவர்களின் தேர்வுகளையும் தனிப்பட்ட உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் பார்வையாளர்கள் பலரது மத்தியில் உருவானது. அதேபோல், ‘ஹைக்கூ’ திரைப்படமும் பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை எப்படி மாற வேண்டும் என்பதையும், பெண்களை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்கிறது. ஆனால், இந்தப் படம் எந்தக் கருத்தையும் போதிக்கும் வகையில் இருக்காது. கதைக்குள் கருத்தை இயல்பாக இணைத்து, ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக உருவாக்கியிருக்கிறோம். திரையரங்கைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் மனதில் இந்தப் படம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்றார்.

இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோருடன் அதிர்ச்சி அருண், சுப்ரமணிய சேது, அதியமான், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். ஹரிஹரன் ராம் கூடுதல் திரைக்கதை பணிகளை மேற்கொண்டுள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவையும், சக்தி பிரணீஷ்.பி படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். கலை இயக்கத்தை பிரேம் கருந்தமலை மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பி. சக்திவேலன் வெளியிடுகிறார். காதல், நகைச்சுவை மற்றும் இளமைத் துள்ளல் நிறைந்த இப்படம் அக்டோபர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.