சர்வதேச கேரள ஆவணப்படத் திருவிழாவில் தேர்வான “தி வேலி ஆஃப் ஹெல்த்”!

மருத்துவ வசதிகள் குறைவாக இருந்த ஒரு பழங்குடியினப் பகுதியில் ஏற்பட்ட சமூக மாற்றத்தையும், மருத்துவ சேவையின் முக்கியத்துவத்தையும் பதிவு செய்துள்ள ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ ஆவணப்படம், 2026ஆம் ஆண்டுக்கான 18வது சர்வதேச கேரள ஆவணப்படம் மற்றும் குறும்படத் திருவிழாவில் (IDSFFK) அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இயக்குநரும் எழுத்தாளருமான சங்கர நாராயணன் இயக்கியுள்ள இப்படம், தமிழ்நாட்டின் சிட்லிங்கி பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மாற்றத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

1990களில் சிட்லிங்கி பகுதியில் வாழ்ந்த பழங்குடியின மக்கள் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வந்தனர். இந்தச் சூழலில், இரண்டு மருத்துவர்கள் அப்பகுதிக்கு வந்து 1993ஆம் ஆண்டு ‘Tribal Health Initiative’ (THI) என்ற அமைப்பைத் தொடங்கினர். சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி, பின்னர் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கும் அமைப்பாக வளர்ந்தது. இதன் மூலம் அப்பகுதி மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றங்களையும், அதற்குப் பின்னால் இருந்த மனிதர்களின் அர்ப்பணிப்பையும் ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ ஆவணப்படம் பதிவு செய்துள்ளது.

பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் வாழ்வியல் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளதாக இயக்குநர் சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். மருத்துவம், மனித கண்ணியம், சமூகப் பங்களிப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகிய அம்சங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

திரைப்படம் குறித்து இயக்குநர் சங்கர நாராயணன் பகிர்ந்து கொண்டதாவது,

“பழங்குடியின சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், மருத்துவ உதவியைப் பெறுவதில் அவர்கள் சந்திக்கும் தடைகளையும் உலகம் அறிய வேண்டும் என்று நினைத்தேன். மருத்துவம் நாளுக்கு நாள் வணிகமயமாகி வரும் இந்தக் காலகட்டத்தில், தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வு காண முன்வந்த ஒரு பள்ளத்தாக்கின் கதை, மிகவும் அவசியமான மாற்றுப் பார்வையை முன்வைக்கிறது. இது அனைவருக்கும் பொதுவான ஒரு பிரச்சினையைப் பேசுகிறது. அதே நேரத்தில், எது தவறாக உள்ளது என்பதை மட்டும் சுட்டிக்காட்டாமல், அதற்கான தீர்வையும் இந்தப் படம் முன்வைக்கிறது. இந்தக் கதையைத் தேர்வு செய்ய என்னைத் தூண்டிய முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

இந்தப் பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த என் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி. படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த பாராட்டுகள் எனக்கு பொறுப்புணர்வை அதிகரித்துள்ளது. மேலும், இதுபோன்ற கதைகளை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எனது எண்ணத்தையும் வலுப்படுத்தியுள்ளது” என்றார்.

மருத்துவச் சேவையின் வளர்ச்சியை மட்டும் விவரிக்காமல், ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தில் மக்களின் பங்கேற்பும் நம்பிக்கையும் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ ஆவணப்படம் எடுத்துக்காட்டுகிறது. அக்கறையும் கூட்டு முயற்சியும் இருந்தால் அடிப்படையான சூழலில்கூட பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையைச் சிட்லிங்கியின் பயணத்தின் வழியாக இந்தப் படம் முன்வைக்கிறது.