ஒரு சம்பவம்… பல திருப்பங்கள்! ZEE5-ல் வெளியாகும் “ஆஷா”

மூத்த நடிகை உர்வசி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள உளவியல் த்ரில்லர் திரைப்படம் ‘ஆஷா’. சஃபர் சனல் இயக்கியுள்ள இப்படத்தை விநாயகா அஜித் தயாரித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விஜயராகவன், லட்சுமி மேனன், பாக்யலட்சுமி மற்றும் அஜயன் அடாட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், அக்டோபர் 16, 2026 முதல் மலையாளம் ZEE5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகள் வெளியாகவுள்ளதால், பல்வேறு மொழி ரசிகர்களும் இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

கதையின் மையத்தில் ஆஷா என்ற பெண் இருக்கிறார். கணவரை இழந்த அவர், தனது மகள்களைப் பாதுகாத்து வளர்ப்பதில் உறுதியாக இருக்கிறார். வாழ்க்கையில் ஏற்கெனவே பல சவால்களைச் சந்தித்துள்ள ஆஷா, எதிர்பாராத சாலை விபத்தைத் தொடர்ந்து ஜீமோன் என்ற கதாபாத்திரத்தில் வரும் ஜோஜு ஜார்ஜுடன் மோதலில் சிக்குகிறார்.

சாதாரணமாகத் தொடங்கும் இந்தச் சம்பவம், அடுத்தடுத்து பல எதிர்பாராத நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையையும் அவர்களின் முடிவுகளையும் மாற்றியமைக்கும் இந்தச் சூழலில், பயம், கோபம், தன்மானம் மற்றும் குடும்பத்தினரைப் பாதுகாக்கும் உணர்வு ஆகியவை ஒன்றோடொன்று மோதுகின்றன. இந்தச் சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் உளவியல் போராட்டங்களையும், மனிதர்களின் முடிவுகள் ஏற்படுத்தும் விளைவுகளையும் திரைப்படம் ஆராய்கிறது.

ஒருவரின் செயல்களை மட்டும் வைத்து அவரை நல்லவர் அல்லது கெட்டவர் எனத் தீர்மானிக்க முடியுமா என்ற கேள்வியை ‘ஆஷா’ திரைப்படம் எழுப்புகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குப் பின்னாலும் இருக்கும் சூழ்நிலைகளையும் மனநிலைகளையும் புரிந்துகொள்ளும்போது, பார்வையாளர்களின் எண்ணங்களும் மாறக்கூடும் என்ற கோணத்தில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘பட்டாம்பூச்சி விளைவு’ (Butterfly Effect) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சிறியதாகத் தோன்றும் ஒரு முடிவுகூட எதிர்பாராத பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதே இப்படத்தின் முக்கியக் கரு. ஒரு சாதாரணத் தாய் அசாதாரணமான சூழலில் சிக்கிக்கொண்டால், அவளது வாழ்க்கை எப்படித் திசைமாறும் என்பதை மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியதாக இயக்குநர் சஃபர் சனல் தெரிவித்துள்ளார். வழக்கமான பழிவாங்கும் கதைகளிலிருந்து மாறுபட்டு, மனித உணர்வுகளையும் முடிவுகளின் விளைவுகளையும் முன்னிறுத்தும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் பிரிவுகளின் வணிகத் தலைவர் லாயிட் சி. சேவியர் கூறியதாவது:

“மலையாளம் ZEE5-ல், வழக்கமாக வெற்றிகரமானவை எனக் கருதப்படும் திரைப்படங்களைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதைத் தாண்டி எங்களது நோக்கம் விரிவடைகிறது. சந்தையில் முன்னணி தளமாக விளங்கும் நாங்கள், பார்வையாளர்களின் கண்ணோட்டத்திற்குச் சவால் விடுக்கும் மற்றும் வழக்கத்திற்கு மாறான கதை சொல்லலைக் கொண்டாடும் கதைகளுக்கு ஆதரவளிப்பதில் உறுதியாக இருக்கிறோம். கலைநயத்தின் ஆழத்தாலும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தாலும் பாராட்டப்பட வேண்டிய திரைப்படங்களை முன்னிறுத்துவதில் நாங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்.

‘ஆஷா’ திரைப்படம் எங்களது இந்தக் கொள்கையை மிகச் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது. பார்வையாளர்கள் என்ன நினைக்க வேண்டும் என்று சொல்ல மறுப்பதால், படத்தின் இறுதிக் காட்சிகள் முடிந்த பிறகும் மனதில் நீடிக்கும் திரைப்படமாக இது அமைந்துள்ளது. மாறாக, கதாபாத்திரங்கள் குறித்த தங்களது சொந்த முன்முடிவுகளையும் பார்வைகளையும் கேள்விக்குட்படுத்துமாறு பார்வையாளர்களை இப்படம் அழைக்கிறது. சஃபர் சனல், ஒவ்வொரு முடிவும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் ஆழமாக நம்மை ஈர்க்கும் ஓர் உலகத்தை உருவாக்கியுள்ளார். இதில் சரி, தவறு என்பதற்கான எல்லைகள் தொடர்ந்து மங்குகின்றன. பழம்பெரும் நடிகை உர்வசியின் நடிப்பு, ஆஷா கதாபாத்திரத்திற்கு அசாதாரணமான ஆழத்தை அளிக்கிறது. அவரது பலவீனம், வலிமை மற்றும் முரண்பாடுகள் அனைத்தும் மிகவும் இயல்பானதாக உணரப்படுகின்றன. உணர்வுப்பூர்வமான மற்றும் உளவியல் ரீதியான தீவிரம் கொண்ட இந்தப் பல பரிமாண மலையாளத் திரைப்படத்தை இந்தியா முழுவதும் உள்ள ZEE5 பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அக்டோபர் 16 முதல் பார்வையாளர்கள் இப்படத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.”