சென்னையில் பல்வேறு கிளைகளில் செயல்பட்டு வரும் கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி, முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் ஆகியோரின் தலைமையில் மாணவர்களுக்கு தரமான நடனப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. மாணவர்களின் திறமையை வெளிக்கொணரவும், கலைத் துறையில் பங்களித்தவர்களை கௌரவிக்கவும் இந்த அகாடமி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, ‘டான்ஸ் டான் 2’ என்ற பிரம்மாண்ட நடன விழா இன்று (ஜூலை 25) சென்னை வேல்ஸ் கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரைப்பட நடன உலகின் வரலாற்றில் முக்கியமான ஒரு முயற்சியை ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி முன்னெடுத்துள்ளது.
1973 முதல் 2026 வரை தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிய 125 நடன இயக்குநர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடனப் பள்ளிகளை நடத்தி வரும் 38 நடன ஆசிரியர்கள் இந்த விழாவில் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர். மேலும், அகாடமியின் மாணவர்கள் வழங்கிய வண்ணமயமான நடன நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
இது குறித்து பேசிய நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டர், “இத்தனை வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி வரும் எனக்கு, நமக்கு முன்னர், நம்முடன் மற்றும் நமக்குப் பின்னர் நடன இயக்குநர்களாக அறிமுகமாகி பங்காற்றியவர்கள் குறித்த ஒரு தேடலைத் தொடங்கினேன். இவர்கள் குறித்து பல்வேறு ஆதாரங்களைச் சேகரித்தபோதுதான், 1973 முதல் நடனம் அமைத்த கலைஞர்கள் 125 பேர் தற்போது உள்ளார்கள் என்ற ஆச்சரியமான தகவல் தெரியவந்தது.
இவர்களில் சிலர் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோருடன் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை அனைவரையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடனப் பள்ளிகளை நடத்தி வரும் 38 ஆசிரியர்களையும் கௌரவித்து வருகிறோம்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த 125 பேரில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தற்போது வாய்ப்புகள் இல்லை. அதேபோல், நடன ஆசிரியர்கள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களது நடனப் பள்ளிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடன இயக்குநர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து, நடனப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிச்சமும் ஊக்கமும் கிடைத்தால் பெரிதும் மகிழ்ச்சியடைவேன்,” என்றார்.





