சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு உற்சாகம் சேர்க்கும் ‘தெய்வா’… “வதந்தி சீசன் 2” புதிய பாடல் வெளியானது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து வழங்கும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ தொடரின் புதிய பாடலான ‘தெய்வா’ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. சைமன் K. கிங் இசையமைத்து தயாரித்துள்ள இந்தப் பாடலை, அவருடன் யஷ்வந்த் இணைந்து பாடியிருக்கிறார். மணி ரோமியோ எழுதியுள்ள வரிகளும், உற்சாகம் பொங்கும் இசையும் இணைந்து இந்தப் பாடலை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கியுள்ளன.

‘தெய்வா’ பாடலின் மியூசிக் வீடியோவும் பார்வையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வண்ணமயமான காட்சிகள், துள்ளலான நடன அமைப்புகள், படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் கலகலப்பான தருணங்கள், பின்னணிக் காட்சிகள் (Behind the Scenes) ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், தொடரின் பின்னணியில் நிலவும் உற்சாகமான பணிச்சூழலையும் ரசிகர்கள் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மதுரையின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் பின்னணியில் நகரும் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’, மர்மம், வதந்தி மற்றும் திகில் கலந்த விசாரணைக் கதையை மையமாகக் கொண்டுள்ளது. நெடுஞ்சாலைத் திட்ட தொடக்க விழாவின் போது தோண்டி எடுக்கப்படும் மனித எலும்புக்கூட்டை மையமாகக் கொண்டு தொடங்கும் விசாரணையில், நேர்மையான காவல் அதிகாரி எஸ்.ஐ. மூசா ரஸா (எம். சசிகுமார்) பல அதிர்ச்சிகரமான உண்மைகளை எதிர்கொள்கிறார். அந்தப் பயணம், ‘மணி’ என்ற மர்ம நபரைச் சுற்றி சிக்கலான ரகசியங்களும் ஏமாற்றங்களும் நிறைந்த புதிராக மாறுகிறது.

இந்தத் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, கதை எழுதி இயக்கியுள்ளார். வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் மற்றும் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர். எம். சசிகுமாருடன் யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மொத்தம் எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் தொடர், வரும் ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இதனுடன் தெலுங்கு, இந்தி மொழி டப்பிங் பதிப்புகளும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களும் வழங்கப்படுகின்றன. உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்தத் தொடர் பார்வையாளர்களை சென்றடைய உள்ளது.

இதற்கிடையில், ‘தெய்வா’ பாடல் தற்போது அனைத்து முக்கிய இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.