“மூடர் கூடம் 2” அப்டேட்: புதிய மிஷனுடன் மீண்டும் களமிறங்கும் கல்ட் கிளாசிக்!

தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்ற ‘மூடர் கூடம்’ திரைப்படம், 13 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பரிமாணத்தில் ரசிகர்களை மீண்டும் சந்திக்கத் தயாராகியுள்ளது. படத்தின் இரண்டாம் பாகமான ‘மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்’ திரைப்படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய நவீன் ஹிதயத், இந்த இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார். முதல் படத்தின் டார்க் காமெடி மற்றும் வித்தியாசமான கதை சொல்லலைத் தொடர்ந்தாலும், இந்த முறை அதிரடி, கற்பனை உலகம் மற்றும் சர்வதேச பின்னணியுடன் இன்னும் பிரம்மாண்டமான அனுபவத்தை வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளது.

வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பனியால் சூழப்பட்ட பகுதியில் ஆயுதங்களுடன் நின்றிருக்கும் நான்கு கதாபாத்திரங்களும், கையில் துப்பாக்கியுடன் ‘Happy Life’ என்ற வாசகத்துடன் இருக்கும் டெடி பேரும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளன. அதேபோல், ‘Mission: Possible’ என்ற துணைத் தலைப்பு, படத்தின் தனித்துவமான நகைச்சுவை பாணியை வெளிப்படுத்துகிறது.

இந்த திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, குரோஷியா, ஸ்லோவேனியா மற்றும் கசகஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மேலும், ஹாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள அமெரிக்க தொழில்நுட்பக் குழு விஎஃப்எக்ஸ் பணிகளை மேற்கொண்டு வருவதால், சர்வதேச தரத்தில் காட்சியமைப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் நவீன் ஹிதயத் பகிர்ந்து கொண்டதாவது,

“’மூடர் கூடம்’ என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். பல ஆண்டுகளாக, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து என்னிடம் கேட்டு வந்தனர். வெறுமனே சீக்வலுக்காக நான் இந்தப் படத்தை உருவாக்க விரும்பவில்லை. ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்தும் ஒரு கதையைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். ‘மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்’ அந்தக் கதையாக அமைந்தது. ரசிகர்கள் விரும்பிய நகைச்சுவையைத் தக்கவைத்துக்கொண்டு, கதாபாத்திரங்களையும், கதை சொல்லலையும் இன்னும் பெரிய அளவுக்குக் கொண்டு சென்றுள்ளோம். இந்தக் கதையை நம்பி, முழு சுதந்திரத்துடன் இப்படத்தை உருவாக்க உதவிய தயாரிப்பாளர்களான கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ராவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர்களான கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ரா பகிர்ந்து கொண்டதாவது,

“ஒரு கல்ட் கிளாசிக் படத்தின் தொடர்ச்சியை உருவாக்குவது என்பது மிகப் பெரிய பொறுப்பு. நவீன் இந்தக் கதையை எங்களிடம் கூறியபோது, இது வெறும் இரண்டாம் பாகம் மட்டுமல்ல, ரசிகர்கள் விரும்பிய ஒரு திரைப்படத்தை இன்னும் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பு என்பதை நாங்கள் உணர்ந்தோம். இந்தக் கனவை நனவாக்குவதற்காக அனைத்துத் துறையினரும் கடுமையாக உழைத்துள்ளனர். இன்று முதல் தோற்றத்தை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ‘மூடர் கூடம் 2: மிஷன்: பாசிபிள்’ திரைப்படம், பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பான, பொழுதுபோக்கு நிறைந்த மற்றும் முற்றிலும் புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றனர்.

இந்தப் படத்தில் நவீன் ஹிதயத், ஓவியா, சென்றாயன், ராஜாஜி, குபேரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை நடராஜன் சங்கரன் வழங்கியுள்ளார். படத்தொகுப்பை அதியப்பன் சிவா, ஒலியமைப்பை விஜய் ரத்தினம் MPSE மேற்கொண்டுள்ளனர். கே.ஏ. பாட்சா தலைமையிலான சர்வதேச குழு விஎஃப்எக்ஸ் பணிகளை கவனித்துள்ளது.

கிராண்டல் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ரா தயாரித்துள்ள ‘மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்’, முதல் பாகத்தின் வெற்றியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக உருவாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாக உள்ளன.