சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ முன்பதிவுக்கு அமோக வரவேற்பு!

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கருப்பு’ திரைப்படத்தைத் தொடர்ந்து, அவரது அடுத்த படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, நேற்று முன்பதிவு தொடங்கிய நிலையில், சூர்யா ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தை, ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

சர்வதேச அளவில் சாதனை படைத்த துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், சூர்யா கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு, மேடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா டாண்டன், நாசர், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் நிமிஷ் ரவி ஒளிப்பதிவையும், நவீன் நூலி படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

காதல், குடும்ப உணர்வுகள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய படைப்பாக உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’, சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது.

சூர்யா ரசிகர்களை மட்டுமின்றி, அனைத்து தரப்பு குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், வெளியாகும் நாளை எதிர்நோக்கி ரசிகர்களிடையே உற்சாகம் அதிகரித்துள்ளது.