காதல் மெலடியாக வந்த ‘ஆசை வரமே’ – “அன்பில் அவன்” மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘அன்பில் அவன்’. இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

காதல் மற்றும் இளமை உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். “ஆசை வரமே” பாடலை கோவிந்த் வஸந்தா மற்றும் சின்மயி இணைந்து பாடியுள்ளனர். பாடலுக்கான வரிகளை மெட்ராஷீ எழுதியுள்ளார்.

“நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை” என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த மெலடி பாடல், காதலர்களுக்கிடையேயான ஆழமான அன்பையும் நெருக்கத்தையும் மென்மையான இசையில் வெளிப்படுத்துகிறது. காதலில் ஏற்படும் சிறு ஊடல்கள், செல்லச் சண்டைகள் மற்றும் இனிமையான தருணங்களை பாடல் அழகாக பிரதிபலிக்கிறது.

கோவிந்த் வஸந்தாவின் மென்மையான மெலடி இசையும், சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தாவின் குரல்களும் பாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளன. காதலின் அழகான உணர்வுகளை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ள இப்பாடல், வெளியான குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ படப்புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கே. செல்வா படத்தொகுப்பை மேற்கொள்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய காதல் கதையாக உருவாகும் இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் பாடலான “ஆசை வரமே” பெற்றுள்ள வரவேற்பு, ‘அன்பில் அவன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

காதல், இசை மற்றும் இளமை உணர்வுகளுடன் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’, இளம் தலைமுறையினருக்கு ரசிக்கக்கூடிய ஒரு இனிமையான காதல் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.