பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் கிரீஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமீதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் ஃபியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தின் தமிழ் பதிப்பை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகின்றன.
கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி மலையாளத்தில் வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ் ரசிகர்களுக்காக இப்படத்தின் தமிழ் பதிப்பு செப்டம்பர் 4-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் ரசிகர்களுக்கு படத்தை அறிமுகப்படுத்தும் விதமாக சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் பகத் பாசில், உன்னி மாயா பிரசாத் மற்றும் இயக்குநர் கிரீஷ் ஏ.டி. ஆகியோர் கலந்து கொண்டு படத்தின் உருவாக்கம் மற்றும் அனுபவங்கள் குறித்து பேசினர்.
இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரான உன்னி மாயா பிரசாத் பேசுகையில்,
” இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பாருங்கள். மலையாள ரசிகர்களை போல் உங்களுக்கும் இந்த திரைப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஆதரவு தாருங்கள்” என்றார்.
இயக்குநர் கிரீஷ் ஏ டி- பேசுகையில், ”எனக்கு கூட்டத்தின் முன்பு எப்படி பேச வேண்டும் என்பது தெரியாது. செப்டம்பர் நான்காம் தேதி வெளியாகும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று குடும்பத்தினருடன் பாருங்கள். உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ என்றால்.., கேரளாவில் தேவாலயங்களில் அருகே உள்ளவர்களை இப்படி வகைப்படுத்தி இருப்பார்கள்.
இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் சில கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் கதையின் நாயகனான ஜஸ்டின் கதாபாத்திரம் எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரின் வாழ்வியல் இருந்து உருவான கேரக்டர்” என்றார்.
தயாரிப்பாளர் பஹத் பாசில் பேசுகையில்,
”படத்தின் நாயகனான நிவின்பாலி மற்றும் மமீதா பைஜூ ஆகிய இருவரும் தவிர்க்க முடியாத காரணத்தினால் இங்கு வர இயலவில்லை.
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம்- எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. நான்- தினேஷ்- ஷியாம் -ஆகிய மூவரும் இணைந்து தயாரித்திருக்கிறோம். எங்களுடைய நட்பு 2018 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி அற்புதமாக தொடர்கிறது. எங்கள் இதயத்திற்கு நெருக்கமான கதைகளை தேர்வு செய்து நாங்கள் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம். இந்த அழகான திரைப்படத்தை வழங்கியதற்காக இயக்குநர் கிரிஷ் ஏடி உள்ளிட்டஇந்த படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் நல்ல படங்களை வரவேற்று கொண்டாடுவார்கள். அவர்களுக்கு இந்த திரைப்படமும் கொண்டாடும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த மலையாள ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
கிரீஷ் ஏ.டி. இயக்கியுள்ள இப்படத்தில் நிவின் பாலி, மமீதா பைஜூ, சங்கீத் பிரதாப், ரோஷன் ஷா நவாஸ், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அஜ்மல் ஷபு ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.
பாவனா ஸ்டுடியோஸ் மற்றும் பகத் பாசில் & பிரண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பை ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் ஃபியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
மலையாளத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ் ரசிகர்களிடமும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்புடன் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ செப்டம்பர் 4-ம் தேதி முதல் தமிழக திரையரங்குகளில் வெளியாகிறது.





