தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம் சிறப்பான பூஜையுடன் இன்று துவங்கப்பட்டது. தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படத்தின் துவக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், படத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.
குறிப்பிடத்தக்க வகையில், அமைச்சர் ராஜ் மோகன் தனது முதல் இயக்குநர் முயற்சியான “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியிருந்தார். தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர், அதே நிறுவனத்தின் புதிய திரைப்படத்தை துவக்கி வைத்தது நிகழ்வுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.
விழாவில் முன்னணி இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் ரவி மோகன் ஆகியோரும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இயக்குநர் ஹெச். வினோத்தின் இணை இயக்குநராக பணியாற்றிய ஹர்ஷவரதன், இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 1970-களின் தொடக்க காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்டு நேர்மையும் உயர்ந்த லட்சியங்களும் கொண்ட ஒரு இளைஞனின் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை சுவாரஸ்யமாக சொல்லவுள்ளது.
1970-களின் சென்னையை திரையில் உயிர்ப்பிக்கும் வகையில், அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் நகரின் தனித்துவமான சூழலை மிக நுணுக்கமாக பதிவு செய்ய படக்குழு தீவிரமான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மாறுபட்ட கதைக்களங்களையும் வணிக ரீதியான வெற்றிகளையும் தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ், இந்த திரைப்படத்தையும் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.





