‘சிறை’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்ற இளம் நடிகர் LK அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. மாறுபட்ட கதைக்களங்களையும், வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் அக்ஷய் குமாரின் அடுத்த படைப்பாக இப்படம் உருவாகிறது.
கிரைம் டிராமா பின்னணியில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இயக்குகிறார். இவர் இயக்குநர் H. வினோத்தின் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘ஜனநாயகன்’ உள்ளிட்ட H. வினோத் இயக்கிய படங்களில் பணியாற்றியுள்ள விஷ்ணு அமரன், தற்போது இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தில் L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். LK அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் தொடக்க விழாவில் இயக்குநர்கள் H. வினோத், சிறுத்தை சிவா, R. S. துரை செந்தில்குமார், சுரேஷ் ராஜகுமாரி, விக்னேஷ் வடிவேல், தயாரிப்பாளர்கள் R. K. செல்வமணி, T. சிவா, G. தனஞ்செயன், ஃபைவ் ஸ்டார் செந்தில், ஃபைவ் ஸ்டார் கல்யாண், அருண் விஸ்வா, சபரி, விஜய், ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இப்படத்திற்கு சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். படத்தொகுப்பை கலைவாணன். R கவனிக்கிறார். ஆடை வடிவமைப்பை ஆர்த்தி நீலகிருஷ்ணன் மேற்கொள்ள, கலை இயக்குநராக P.S. ஹரிஹரன் பணியாற்றுகிறார். விளம்பர வடிவமைப்பை அம்பானி (ADFX) கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை ஆக்ஷன் சந்தோஷ் அமைக்கிறார்.
நிர்வாக தயாரிப்பாளராக மணிகண்டனும், கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அருண் K-வும் பணியாற்றுகின்றனர்.
சென்னை, கொடைக்கானல் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. கிரைம் டிராமா களத்தில் உருவாகும் இப்படம், மாறுபட்ட கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகிறது.
‘சிறை’ படத்திற்குப் பிறகு ‘ராவடி’ திரைப்படத்தில் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் LK அக்ஷய் குமார் நடித்திருந்தார். குறிப்பாக கல்லூரி மாணவர் தோற்றத்தில் அவர் இடம்பெற்ற டீசர் மற்றும் புரமோஷன் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இதனைத் தொடர்ந்து தற்போது கிரைம் டிராமா களத்தில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தொடர்ந்து ஒரே மாதிரியான வேடங்களைத் தவிர்த்து, ஒவ்வொரு படத்திலும் புதிய கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வரும் LK அக்ஷய் குமாரின் திரைப்பயணத்தில், இந்த புதிய திரைப்படமும் குறிப்பிடத்தக்க படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






