அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்திற்கு டிரெய்லர் மற்றும் விளம்பரப் பணிகள் மூலம் ரசிகர்களிடம் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பல்வேறு தளங்களிலும் பார்வையாளர்கள் அளித்து வரும் ஆதரவு படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், செப்டம்பர் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் விநியோகஸ்தர்களிடம் ஏற்பட்டுள்ள அதிகப்படியான எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு, படத்தை இன்னும் பிரம்மாண்டமாகவும், அதிக திரையரங்குகளில் வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீடு ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் அக்டோபர் 2, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சுமார் இரண்டு ஆண்டுகளாக மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களை முழுமையான திரையரங்கு அனுபவத்துடன் சென்றடைய வேண்டும் என்பதே படக்குழுவின் நோக்கமாக உள்ளது. இதற்கான கூடுதல் பணிகளை நிறைவு செய்து, பெரிய அளவிலான வெளியீட்டுடன் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த ஒரு வார கால அவகாசம் பயன்படுத்தப்பட உள்ளது.
‘அன்பில் அவன்’ படத்தின் மீது தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளித்து வரும் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. மேலும், அக்டோபர் 2 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.






