“பாகுபலி” தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படைப்பு – அர்ஜுன் தாஸின் “ஜான் டோ”!

பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ஜான் டோ’ (John Doe). இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு, இயக்குநர் மதுமிதா மற்றும் கதாசிரியர் நிக்கோலஸ் செவாலியர் இணைந்து கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளனர்.

இப்படத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைக்க, ஆர்டிஸ்ட் 404 இசைக்குழு கூடுதல் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. விஜய் வெங்கடரமணன் படத்தொகுப்பையும், அஷ்வினி காலே தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் குறிப்பிடுகையில்,

” ஜான் டோ என்பவர் யார்? பாதிக்கப்பட்டவரா? கொலைகாரனா? காணாமல் போன குழந்தையா? அல்லது இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒருவரா..? என்பதை பற்றிய சுவாரசியமான கதையாக உருவாகி இருக்கிறது. இதில் தெரிந்ததற்கும்… நம்பப்படுவதற்கும்… இடையிலான எல்லைக்கோடு மறையத் தொடங்குகிறது. கதையின் நாயகனான சந்துரு தனக்குள் எழும் கேள்விகளுக்கான பதில்களை தேடி பயணிக்கும் போது… கடைசி கேள்வியை விட, அவருக்குள் எழும் மற்றொரு ஒரு கேள்வி மிகுந்த கவலையை தருகிறது. அது என்ன வெனில்… ஜான் டோவை பற்றிய உண்மையை யாரும் எதிர்கொள்ள தயாராக இல்லை என்றால் என்ன செய்வது? இந்த கேள்விக்கான பதிலை பார்வையாளர்கள் எளிதில் யூகிக்காத வகையில் இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.‌

வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் காவல்துறை சீருடையில் தோன்றுகிறார். அவரது கையில் இருக்கும் பொம்மையும், மர்மத்தை உணர்த்தும் தலைப்பு வடிவமைப்பும் படத்தின் கதைக்களம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ், ‘ஜான் டோ’ படத்தில் முதல்முறையாகக் காவல்துறை சீருடையில் தோன்றுவது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரம்மாண்டமான படைப்புகளை உருவாக்கிய அர்கா மீடியாவொர்க்ஸ், தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் இயக்குநர் மதுமிதா மற்றும் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் இணைந்துள்ளதால், ‘ஜான் டோ’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், படத்தின் மர்மமான உலகம் குறித்த ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.