அறிமுக இயக்குநர் M. குரு இயக்கத்தில் பரத் – ராஜேஷ் மாதவன் கூட்டணி!

தமிழ் திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கிய நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவை உணர்வாலும் கவனம் ஈர்த்த நடிகர், இயக்குநர் ராஜேஷ் மாதவன் ஆகியோர் முதன்முறையாக இணையும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில் படக்குழுவினர் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் LLP ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் M. குரு எழுதி இயக்குகிறார். நகைச்சுவை, காதல், குடும்பப் பாசம், சென்டிமென்ட் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் முழுமையான கமர்ஷியல் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

படத்தின் பூஜை விழாவில் நடிகர்கள் பரத், ராஜேஷ் மாதவன், சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இயக்குநர் விருமாண்டி முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

‘காதல்’, ‘பட்டியல்’, ‘வெயில்’, ‘எம் மகன்’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய பரத், ‘காளிதாஸ்’ படத்தின் இரண்டு பாகங்கள் மூலமாகவும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர். இந்தப் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

மலையாளத்தில் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’, ‘ந்னா தான் கேஸ் கொடு’ உள்ளிட்ட படங்களில் தனித்துவமான நடிப்பால் பாராட்டுகளைப் பெற்ற ராஜேஷ் மாதவன், தமிழிலும் தனது இருப்பைப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, ‘ஜெயிலர் 2’ படத்தின் ‘அலா பொலேலோ’ பாடலில் இடம்பெற்று தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவரும் பரத்தும் இணைவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தெலுங்குத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையும், தமிழில் ‘புல்லட்’ படத்தில் நடித்தவருமான சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), ‘யூத்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற மீனாட்சி தினேஷ் மற்றும் ‘மார்கழி திங்கள்’, ‘திரௌபதி 2’ படங்களில் நடித்த ரக்‌ஷனா இந்துசூடன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், குணச்சித்திர நடிகை சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திறமையான நடிகர்கள் ஒன்றிணைந்துள்ளதால், நகைச்சுவைக்கும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கும் படத்தில் முக்கிய இடம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவை S.R. சதீஷ் குமார் கவனிக்கிறார். அருள் E. சித்தார்த் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். டான் பாலா கலை இயக்கத்தையும், தினேஷ் காசி சண்டைப் பயிற்சியையும் கவனிக்கின்றனர். மணி ஒப்பனையையும், லாவண்யா தேசிகன் ஆடை வடிவமைப்பையும் மேற்கொள்கின்றனர். விளம்பர வடிவமைப்பை தினேஷ் அசோக் கவனிக்க, தயாரிப்புக் கட்டுப்பாட்டுப் பணிகளை சேது பாண்டியன் மேற்கொள்கிறார். ஆடைப் பொறுப்பில் விக்னேஷ், புகைப்படப் பணிகளில் சிவா ஆகியோர் இணைந்துள்ளனர். மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் கவனிக்கிறார்.

குடும்ப உறவுகளின் நெருக்கம், காதலின் அழகு, வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை மற்றும் மனதைத் தொடும் சென்டிமென்ட் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரள மாநிலத்தின் இயற்கை எழில் கொஞ்சும் ஆலப்புழா பகுதிகளில் சுமார் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் இணைந்துள்ள இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

பரத் – ராஜேஷ் மாதவன் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய திரைப்படம், நகைச்சுவையும் குடும்ப உணர்வுகளும் கலந்த ஒரு மகிழ்ச்சியான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.