வின்சென்ட்டாக மிரட்டும் ஷிவ் பண்டிட் – “சிக்மா” குறித்து மனம் திறந்தார்!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் நடிகர் ஷிவ் பண்டிட் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், ஆக்‌ஷன்–அட்வென்ச்சர் ஹெய்ஸ்ட் த்ரில்லருக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்த்துள்ளார்.

நடிகர் ஷிவ் பண்டிட் தனது திரைப்பயணம் குறித்து பேசுகையில், சுமார் 20 ஆண்டுகளாக நடிப்புத் துறையில் பயணித்து வருவதாக தெரிவித்தார். 2002ஆம் ஆண்டு கேமரா முன்பு முதன்முறையாக நடித்ததாகவும், அதற்கு முன்பே தனது ஒன்பது வயதில் நாடகம், நடிப்புப் பயிற்சி மற்றும் மேடை நிகழ்ச்சிகள் மூலம் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

நடிப்புடன் இணைந்து மூன்று ஆண்டுகள் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிய அனுபவம், குரல் ஏற்ற இறக்கம் மற்றும் தகவல் தொடர்பு திறனை மேம்படுத்த பெரிதும் உதவியதாகவும் அவர் தெரிவித்தார். தன்னை ஒரு மெயின்ஸ்ட்ரீம் நடிகராக கற்பனை செய்ததில்லை என்றும், பிஜாய் நம்பியார் இயக்கத்தில் அனுராக் காஷ்யப் தயாரித்த ‘ஷைத்தான்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானதாகவும் கூறினார். அந்தப் படத்திற்காக ஃபிலிம்ஃபேர் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

பல திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ள ஷிவ் பண்டிட்டுக்கு ‘லீலை’ திரைப்படம் தமிழ் சினிமாவில் முதல் படமாக அமைந்தது. அப்போது இப்படத்திற்கு பெரிய அளவில் திரையரங்க வெளியீடு கிடைக்காதபோதிலும், படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவானதாக அவர் குறிப்பிட்டார். பல ஆண்டுகள் கடந்த பின்னரும் ‘லீலை’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருவதாகவும், இன்றளவும் அந்தப் படத்திற்கு தனி ரசிகர்கள் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

இதனால் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிப்பது தனக்கு உற்சாகமாக இருப்பதாக ஷிவ் பண்டிட் கூறினார்.

‘சிக்மா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து அவர் கூறுகையில், சமூக வலைதளங்களில் ‘லீலை’ உள்ளிட்ட தனது முந்தைய படங்கள் தொடர்பாக ரசிகர்கள் காட்டி வந்த ஆர்வத்தை இயக்குநர் ஜேசன் சஞ்சய் கவனித்ததாக தெரிவித்தார். இதன் அடிப்படையில், தன்னை ‘சிக்மா’ படத்தில் நடிக்க வைப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்று ஜேசன் சஞ்சய் கருதியதாகவும், அதன் மூலம் ‘வின்சென்ட்’ கதாபாத்திரம் தன்னிடம் வந்ததாகவும் அவர் கூறினார்.

இப்படத்தில் வின்சென்ட் ஒரு சூதாட்ட கிளப்பை நடத்துபவராகவும், தனது நண்பர் எழில் மூலம் சில சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவராகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஷிவ் பண்டிட் தெரிவித்தார். கதாபாத்திரத்தின் தன்மை பிடித்திருந்ததால் அதை மிகவும் ரசித்து நடித்ததாகவும் அவர் கூறினார்.

‘சிக்மா’ ஒரு விறுவிறுப்பான ஆக்‌ஷன்–அட்வென்ச்சர் ஹெய்ஸ்ட் திரைப்படம் என்றும், அதில் ஒரு பகுதியாக இருந்ததில் பெருமைப்படுவதாகவும் ஷிவ் பண்டிட் தெரிவித்தார். படத்திற்காக ஜேசன் சஞ்சய் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்துள்ளதாக பாராட்டிய அவர், சிறந்த இயக்குநராக மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் ஜேசன் தன்னைக் கவர்ந்துள்ளதாக கூறினார்.

மேலும், ஜேசன் சஞ்சய் தற்போது தனது குடும்பத்தில் ஒருவரைப் போன்ற நெருக்கமானவராக மாறிவிட்டதாகவும், வின்சென்ட் கதாபாத்திரத்தில் தன்னை நம்பி நடிக்க வைத்ததற்கு நன்றி என்றும் ஷிவ் பண்டிட் தெரிவித்தார். சந்தீப் கிஷன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருடனும் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.

அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ‘சிக்மா’ திரைப்படம் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்புதாசன், யோக் ஜேபி, மகாலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் எஸ் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சஞ்சீவ் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.