டிசம்பரில் வெளியாகும் “தொண்டர் படை”… முதல் பாடலுக்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு!

ரஃப் நோட் புரொடக்‌ஷன் தயாரிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’. இப்படத்தின் முதல் பாடலான ‘நந்தினி’ பாடல் வெளியீட்டு விழா, சவேதா கல்விக் குழுமத்தில் உற்சாகமாக நடைபெற்றது.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கும் ராப் பாடகர் பால் டப்பா, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், ‘நந்தினி’ பாடலுக்கு இசையமைத்து, பாடல் வரிகளையும் எழுதியுள்ளார். மேலும், தனது குரல் மற்றும் நடனத்தின் மூலமாகவும் பாடலுக்கு உயிரூட்டியுள்ளார்.

இளைஞர்களை நேரில் சந்தித்து, அவர்களின் முன்னிலையில் பாடலை வெளியிட வேண்டும் என்ற படக்குழுவின் விருப்பத்தின்படி இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சவேதா கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் வேந்தரான டாக்டர் என்.எம். வீரையன் பாடலை வெளியிட்டார். படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், 5000 மாணவர்கள் முன்னிலையில் பாடல் திரையிடப்பட்டது. பாடலைக் கண்ட மாணவர்கள் உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்து தங்களது வரவேற்பை வெளிப்படுத்தினர்.

துள்ளலான இசை மற்றும் நவீன ராப் இசையின் தனித்துவமான பாணியில் உருவாகியுள்ள ‘நந்தினி’ பாடல், இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. வேடன், பால் டப்பா, கிஷோர் மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர். இசையமைப்பு, பாடல் வரிகள், பாடல் மற்றும் நடனம் எனப் பல்வேறு அம்சங்களில் பால் டப்பா பங்களித்திருப்பது பாடலின் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. மாணவர்களிடையே கிடைத்த வரவேற்பு, பாடல் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் ராஜ் தருண், பரத், ஆரி அர்ஜுனன், சுனில், ராதா ரவி, கிஷோர், பால் டப்பா, அம்மு அபிராமி, பிரசன்னா பாலச்சந்திரன், பரத் சீனி, விஜேதா வசிஸ்ட், ஜெஃப்ரி, இம்மான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

பிரம்மாண்டமான பின்னணியிலும், இளைஞர்களைக் கவரும் பல்வேறு அம்சங்களுடனும் உருவாகி வரும் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ திரைப்படத்தை வரும் டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.