ஒரு நடிகரின் நடிப்புக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் ரசிகர்கள் வழங்கும் அன்பும் பாராட்டுகளும்தான். கதாநாயகன், வில்லன் அல்லது குணச்சித்திர நடிகர் என எந்தப் பாத்திரத்தில் நடித்தாலும், அந்தக் கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைப்பதே ஒரு கலைஞரின் வெற்றி. அந்த வகையில், தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் முத்துக்குமார், சமீபத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படத்தில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இப்படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பு குறித்துப் பேசிய முத்துக்குமார், “ஒரு நடிகர் கதாநாயகனாகவோ, வில்லனாகவோ அல்லது குணச்சித்திர கதாபாத்திரத்திலோ நடித்தாலும், ரசிகர்கள் அவர் மீது காட்டும் அன்பு அளவற்றது. ‘டோரதி’ படத்திற்காக எனக்குக் கிடைத்து வரும் பாராட்டுகளும் அன்பும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன. இதற்காக ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாதிரியான சவாலான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். படப்பிடிப்பின்போதே கார்த்திக் சுப்புராஜிடம், ‘உங்களுடைய பத்து படங்களில் இந்தப் படம்தான் சிறந்த படமாக இருக்கும்’ என்று கூறினேன்.
முதலில் இப்படத்தில் சகோதரர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத்தான் என்னைத் தேர்வு செய்திருந்தார்கள். ஆனால், எனக்கு ‘விசில் வீரய்யா’ கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இறுதியில், நான் விரும்பிய அந்தக் கதாபாத்திரத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் என்னை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன. இந்தக் கதாபாத்திரத்திற்காக எனது தோற்றத்தை மாற்றியமைத்த மும்பையைச் சேர்ந்த மேக்கப் கலைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாத்திரத்திற்கு ரசிகர்கள் அளிக்கும் அன்பு, எனக்கு மேலும் பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் படங்களிலும் ரசிகர்களைக் கவரும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் அளித்துள்ளது” என்றார்.
கூத்துப் பட்டறையின் மூலம் நாடகக் கலையில் அனுபவம் பெற்ற முத்துக்குமார், தொடர்ந்து பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பா. ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த தனிகா கதாபாத்திரம் அவருக்குப் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
இதனைத் தொடர்ந்து ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜகமே தந்திரம்’, ‘தாய் கிழவி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘காட்டான்’ இணையத் தொடரிலும் தனது நடிப்பின் மூலம் கவனம் பெற்றார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைத் திரையுலகில் உருவாக்கி வருகிறார்.
தற்போது ‘சார்பட்டா 2’, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘சேயோன்’, அருள்நிதி நடிக்கும் ‘டிமாண்டி காலனி 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் முத்துக்குமார் நடித்து வருகிறார். ‘டோரதி’ படத்தில் அவருக்குக் கிடைத்துள்ள பாராட்டுகள், அவரது திரைப்பயணத்தில் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க அங்கீகாரமாக அமைந்துள்ளது.





