“முயற்சியைக் கைவிடாதீர்கள்; மற்றவர்களையும் உயர்த்துங்கள்” – மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை!

சென்னை தியாகராய நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில், ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், பிளஸ் டூ முடித்துக் கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவியருக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும், மூத்த ஓவியர் ஜீவானந்தனுக்கு விருதும் பரிசுத்தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், விளிம்புநிலை மக்களின் கல்வி வளர்ச்சிக்காகச் செயல்பட்டு வரும் மூன்று அமைப்புகளுக்கும் நிதியுதவி அளிக்கப்பட்டது.

1979-ல் தொடங்கிய கல்விச் சேவை!

திரைக்கலைஞர் சிவகுமார், தனது 100-வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் நடித்ததற்காகப் பெற்ற ரூ.25,000 முழுச் சம்பளத்தையும் 1979-ஆம் ஆண்டு வங்கியில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் இந்த அறக்கட்டளையைத் தொடங்கினார்.

தொடக்கத்தில் மாணவர்களுக்கு கல்விப் பரிசுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் சிவகுமாரின் சொந்த நிதியிலிருந்தும் கல்வி உதவிகள் வழங்கப்பட்டன. 2006-ஆம் ஆண்டு முதல் அகரம் ஃபவுண்டேஷன் இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகளை முழுமையாக ஏற்று, ஆண்டுதோறும் மாணவர்களுக்கு உதவித்தொகைகளையும், கலைஞர்களுக்கு விருதுகளையும் வழங்கி வருகிறது.

ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் விருது!

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிப்பதுடன், ஓவியத் துறையில் நீண்டகாலமாகப் பங்களித்து வரும் மூத்த கலைஞர்களைப் பாராட்டும் நோக்கிலும் சிவகுமார் கல்வி அறக்கட்டளை ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும் இந்த விருதை இதற்கு முன்பு ஓவியர்கள் அம்புலிமாமா சங்கர், ராமு, ஜெயராஜ், மாயா, மணியம் செல்வன் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.

அந்த வகையில், அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழாவில், ஓவியக் கலையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் மூத்த ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

25 மாணவர்களுக்கு ரூ.2.50 லட்சம் கல்வி உதவி!

பொருளாதார நெருக்கடிகளையும் பல்வேறு தடைகளையும் கடந்து, பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவியர் இவ்விழாவில் பாராட்டப்பட்டனர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2.50 லட்சம் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. மாணவர்களின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மூன்று கல்வி அமைப்புகளுக்கு நிதியுதவி!

விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகப் பணியாற்றி வரும் மூன்று அமைப்புகளுக்கு அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

திண்டிவனம் தாய் தமிழ் தொடக்கப்பள்ளி – ரூ.6.28 லட்சம்: தாய்மொழி வழிக் கல்வியை முன்னிறுத்தி, கடந்த 25 ஆண்டுகளாகத் திண்டிவனம் ரோசனை பகுதியில் செயல்பட்டு வரும் தாய் தமிழ் தொடக்கப்பள்ளி, மாணவர்களுக்கு இலவசக் கல்வியுடன் மதிய உணவையும் வழங்கி வருகிறது. இப்பள்ளியின் கல்விச் சேவைக்கு கடந்த 16 ஆண்டுகளாக அகரம் ஃபவுண்டேஷன் ஆதரவளித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2026–2027 கல்வியாண்டில் ஆசிரியர்களின் மாதச் சம்பளத்திற்கான பங்களிப்பாக ரூ.6.28 லட்சம் வழங்குவதற்கான உறுதிமொழிக் கடிதம் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

ஈரோடு சுடர் அமைப்பு – ரூ.2 லட்சம்: ஈரோடு மாவட்டத்தின் பழங்குடியினக் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் சுடர் அமைப்பு, சத்தியமங்கலம் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய குழந்தைகளை மீண்டும் கல்விப் பாதைக்குக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்காக 25 மாலை நேரப் படிப்பகங்களையும் நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் பணிகளுக்கு ஆதரவாக ரூ.2 லட்சத்திற்கான காசோலை அதன் நிறுவனர் நடராஜனிடம் வழங்கப்பட்டது.

வாழை அமைப்பு – ரூ.3 லட்சம்: சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்ட வாழை அமைப்பு, தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் உள்ள ஏழு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து கல்வி மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருகிறது. இந்த ஆண்டிற்கான பங்களிப்பாக மாதம் ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.3 லட்சம் வழங்குவதற்கான உறுதிமொழிக் கடிதம் அமைப்பின் தன்னார்வலர்களிடம் அளிக்கப்பட்டது.

“கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் எங்கும் சாதிக்கலாம்” – சிவகுமார்

விழாவில் மாணவர்களைப் பாராட்டிப் பேசிய திரைக்கலைஞர் சிவகுமார், கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் சாதிக்க முடியும் என்பதை மாணவர்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தனது இளமைக்காலக் கல்வி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், கிராமத்தில் போதிய பள்ளிக் கட்டிட வசதிகளும் முறையான கல்வி உள்கட்டமைப்புகளும் இல்லாத சூழலில் படித்ததாகக் குறிப்பிட்டார். தனியார் ஆசிரியர்களிடம் கல்வி கற்க வேண்டிய நிலை இருந்ததையும், குடும்பத்தின் பொருளாதாரச் சிரமங்களால் தனது சகோதரியின் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.

தனது தந்தை தான் பத்து மாதக் குழந்தையாக இருந்தபோதே மறைந்துவிட்டதாகவும், தாயின் உழைப்பும் தியாகமுமே தன்னைப் படிக்க வைத்ததாகவும் அவர் உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். ஏழ்மையான குடும்பங்களில் பிறக்கும் மாணவர்கள் கல்விக்காக எதிர்கொள்ளும் சிரமங்களைத் தாம் நன்கு அறிந்திருப்பதாகக் கூறிய அவர், கல்வி ஒருவரது வாழ்க்கையை மாற்றும் வலிமை கொண்டது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், மாணவர்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள கல்வி வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி, இலக்கில் உறுதியுடன் இருந்து, ஒழுக்கத்தையும் விடாமுயற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தங்களது வெற்றியின் மூலம் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“வாழ்க்கையில் எப்போதும் ‘ஒன் மோர்’ கேளுங்கள்” – சூர்யா

விழாவில் பேசிய நடிகர் சூர்யா, சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் ஆண்டு விழா தங்களது குடும்பத்தின் நிகழ்வைப் போன்றது என்றும், ஆண்டுதோறும் இந்தக் குடும்பம் விரிவடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார். கல்வியில் முன்னேறுவதற்காக மாணவர்கள் கடந்து வந்த தடைகளையும், அவர்கள் பெற்றுள்ள வெற்றிகளையும் பார்க்கும்போது பெருமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அகரம் ஃபவுண்டேஷன் கடந்த 20 ஆண்டுகளில் முதல் தலைமுறைக் கல்வியாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 7,000 பேரைச் சென்றடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட சூர்யா, கல்வி வாய்ப்புகள் கிடைக்காத மாணவர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டுவது அகரத்தின் முக்கிய நோக்கம் என்றார். கிராமங்கள், மலைப்பகுதிகள், கடலோரப் பகுதிகள் மற்றும் கல்வி இடைநிற்றல் அதிகமுள்ள சமூகங்களில் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனது திரைப்பயணத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்ட சூர்யா, ‘One More’, ‘Rehearsal’, ‘Credits’ ஆகிய மூன்று விஷயங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

சினிமாவில் ஒரு காட்சியைச் சிறப்பாக உருவாக்கப் பலமுறை மீண்டும் முயற்சி செய்வதைப் போல, வாழ்க்கையிலும் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்றார். மதிப்பெண், கல்லூரி சேர்க்கை அல்லது முதல் வேலை என எதுவாக இருந்தாலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றால் அதுவே முடிவல்ல; இன்னொரு வாய்ப்பைத் தேடி முயற்சி செய்ய வேண்டும் என்று ஊக்கமளித்தார்.

அதேபோல், தொடர்ச்சியான பயிற்சியும் விடாமுயற்சியும் ஒருவரது திறமையை வளர்க்கும் என்று குறிப்பிட்ட அவர், எந்தத் துறையில் ஆர்வம் இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் அதில் சிறந்து விளங்க முடியும் என்றார்.

ஒருவர் வாழ்க்கையில் முன்னேறும்போது அவருக்குப் பின்னால் உதவியவர்களை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்றும் சூர்யா வலியுறுத்தினார். திரைப்படம் உருவாவதற்குப் பல்வேறு கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களின் உழைப்பு தேவைப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், நம்முடைய வளர்ச்சிக்குத் துணைநின்றவர்களை நினைவில் வைத்திருப்பதுடன், நாமும் மற்றொருவரின் முன்னேற்றத்திற்குக் கைகொடுக்க வேண்டும் என்றார்.

சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு காணொளிகளைப் பார்ப்பதுடன் நின்றுவிடாமல், சாதனையாளர்களின் வாழ்க்கைப் பயணம், அவர்களின் அனுபவங்கள் மற்றும் முயற்சிகளைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தனக்குத் தொடக்கத்தில் நடிப்புத் திறன் அதிகமாக இல்லாவிட்டாலும், தொடர்ந்து செய்த பயிற்சிகளும் முயற்சிகளுமே நீண்டகாலத் திரைப்பயணத்தில் தன்னை நிலைநிறுத்தியதாகக் கூறிய சூர்யா, மாணவர்கள் தங்கள் கனவுகளுக்காகத் தொடர்ந்து உழைத்தால் அவர்களாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தார்.

“வாழ்க்கை மிகவும் அழகானது. எதுவும் இறுதியான முடிவு அல்ல. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்; உங்களால் முடிந்தவரை இன்னொருவரையும் உயர்த்துங்கள்” என்ற கருத்துடன் மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், திரையுலகக் கலைஞர்கள், மாணவ, மாணவியர், அகரம் ஃபவுண்டேஷன் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படும் மாணவர்களை ஊக்குவித்து, அவர்களின் எதிர்காலத்திற்குத் துணைநிற்கும் அறக்கட்டளையின் 47 ஆண்டுகாலப் பயணம் இவ்விழாவில் மீண்டும் எடுத்துரைக்கப்பட்டது.