தெய்வீகம், ஆன்மிகம், மர்மம் எனப் பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது ‘ஆதி ருத்ரா’. காந்தாரா திரைப்படத்தைப் போன்று ஆன்மிகப் பின்னணியில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.
Trishul Entertainments நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை பிரசாந்த் G ருத்ரப்பா தயாரிக்கிறார். ‘டண்டுபால்யா’, ‘கிருஷ்ண பிரணய சகி’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த அனுபவம் கொண்ட இவர், இயக்குநர் நவரசன் எழுதி இயக்கும் ‘ஆதி ருத்ரா’ திரைப்படத்தைப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.
1960 முதல் 1990 வரையிலான காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தின் வாழ்வியல் சூழலுடன் தெய்வீக மர்மங்கள், ஆன்மிக நம்பிக்கைகள் ஆகியவற்றை இணைத்து வித்தியாசமான திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. மர்மம் நிறைந்த சம்பவங்கள், பரபரப்பான திருப்பங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் என ரசிகர்களுக்குப் புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் நோக்கில் படக்குழு இப்படத்தை உருவாக்கி வருகிறது.
‘காந்தாரா’, ‘விருபாக்ஷா’, ‘மங்களவாரம்’ மற்றும் தமிழில் வெளியான ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனித்துவமான இசையால் கவனம் ஈர்த்த B. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். A.J. ஷெட்டி ஒளிப்பதிவுப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகும் வகையில் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.
படத்தின் கதைக்களம் மற்றும் முக்கியத் திருப்பங்கள் குறித்த தகவல்களைப் படக்குழு தற்போது ரகசியமாக வைத்துள்ளது. ஆன்மிகமும் மர்மமும் இணைந்த வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகும் ‘ஆதி ருத்ரா’, பான் இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





