ஹாரர், திரில்லர், குடும்ப உணர்வுகள் கலந்த “F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்” – ஜனவரி 2027-ல் ரிலீஸ்!

ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அபய் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. ஹாரர் மற்றும் திரில்லர் கதைக்களத்தை மையமாகக் கொண்டு, அதனுடன் குடும்பப் பாசம், காதல், நகைச்சுவை உள்ளிட்ட அம்சங்களையும் இணைத்து இப்படம் உருவாகியுள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் அபய் சங்கர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மர்மம் நிறைந்த இருண்ட கட்டிடத்தின் பின்னணியில், அச்சத்துடன் மேல்நோக்கிப் பார்க்கும் தாயும் மகனும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளனர். படத்தின் திகில் நிறைந்த கதைக்களத்தையும், அதில் ஒளிந்திருக்கும் மர்மங்களையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ள இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கேரளாவிலிருந்து தனது தாயுடன் சென்னைக்கு வரும் நடுத்தர வயது இளைஞர் ஒருவர், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற லட்சியத்துடன் தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைத் தொடங்குகிறார். இதற்காக இருவரும் புதிய வீட்டில் குடியேறுகின்றனர். ஆனால், அந்த வீட்டில் அடுத்தடுத்து அரங்கேறும் விசித்திரமான சம்பவங்களும், விளக்க முடியாத அமானுஷ்ய நிகழ்வுகளும் அவர்களது வாழ்க்கையைப் பெரும் அச்சத்திற்குள் கொண்டு செல்கின்றன. அந்தக் கட்டிடத்தைச் சுற்றியுள்ள மர்மம் என்ன, அங்கு நிகழும் சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பது யார் என்பதுதான் படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது.

வழக்கமான ஹாரர் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, திகில் காட்சிகளுடன் விறுவிறுப்பான திருப்பங்கள், நகைச்சுவை, காதல் மற்றும் குடும்ப உறவுகளின் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கும் இப்படத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பயத்தையும் சிரிப்பையும் உணர்ச்சிகளையும் ஒரே கதைக்களத்தில் இணைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளனர்.

இப்படத்தில் கலேஷ் ராமானந்த் கதாநாயகனாகவும், ஷ்ரத்தா கோகுல் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நடிகை ஊர்வசியின் மூத்த சகோதரியும், தென்னிந்தியத் திரையுலகின் அனுபவமிக்க நடிகையுமான கலாரஞ்சினி, கதாநாயகனின் தாயாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ரமேஷ் திலக், தலைவாசல் விஜய், சார்மிளா, டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன், கும்கி அஸ்வின், டாக்டர் அமர் ராமச்சந்திரன், பிரதிபா பிரதாப் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

படத்திற்கு ஸ்ரீஜித் எடவானா இசையமைப்பதுடன் பின்னணி இசையையும் உருவாக்கியுள்ளார். பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவையும், ஐயப்பன் நாயர் எம்.எஸ். படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். ஜாக்கி ஜான்சன் புராஜெக்ட் டிசைனராகவும், தீபு சந்திரன் விஎஃப்எக்ஸ் கலைஞராகவும் பணியாற்றியுள்ளனர்.

ஹேஷாம் அப்துல் வஹாப், வினீத் ஸ்ரீனிவாசன், அனிலா ராஜீவ் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர். நவீன் கண்ணன், பீம் ஜி, நவீன் மாரார், ரஞ்சித் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். சி.எம். சாதிக் ஒலி வடிவமைப்பு மற்றும் ஒலிக்கலவைப் பணிகளையும், சரண் விநாயக் ஒலி எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், கலை இயக்குநராக எஸ்.பி. நாகராஜ், தயாரிப்பு மேலாளராக கே. மகேந்திரன், ஆடை வடிவமைப்பாளராக கே. ராமு, ஒப்பனைக் கலைஞராக ரோகிணி கே.எஸ். ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

சென்னை மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்பப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளையும் முடித்து, வரும் ஜனவரி 2027-ல் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே மர்மம் கலந்த திகில் சூழலை வெளிப்படுத்தியுள்ள ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் ஹாரர் ரசிகர்களுக்கு புதுவிதமான திரையரங்க அனுபவத்தை வழங்குமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.