நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்துவரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கும் இந்தப் படத்தின் முதல் பார்வை, கிராமத்து பின்னணி, குடும்ப பாசம் மற்றும் உணர்வுகளால் நிரம்பிய கதையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களை களமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், தந்தை – மகன் உறவின் ஆழமான பாசத்தையும், குடும்பத்தின் மதிப்பையும் மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான கதையாக உருவாகி வருகிறது.
ஒரே கட்டமாக படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 50 சதவீத படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. படப்பிடிப்பு நடைபெற்ற இடங்களில் காட்சிகளை நேரில் கண்ட பொதுமக்கள் பலரும் உணர்ச்சிவசப்பட்டு படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது.
‘தெனாவட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுமையான கிராமத்து கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கும் படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. அவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படைப்பாக இது அமையும் என்ற நம்பிக்கையை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நாயகியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ள இந்தப் படம், சமீபத்திய ‘TTT’ வெற்றிக்குப் பிறகு ஜீவா மீண்டும் மதுரை மண்ணின் மண்வாசனையுடன் கூடிய கதையில் நடிப்பதால் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
படத்திற்கு, முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவமுள்ள சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார். அவரது இசை படத்தின் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களுக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு, K.B. நந்தபாலன் கலை இயக்கம், மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகள், M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ் ஆடை வடிவமைப்பு, T. உதய்குமார் ஒலிப்பதிவு ஆகிய பொறுப்புகளை மேற்கொண்டுள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
வலுவான கதைக்களம், அனுபவமிக்க தொழில்நுட்பக் குழு மற்றும் தரமான தயாரிப்புடன் உருவாகி வரும் ‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக மட்டுமல்லாமல், குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட பேசப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகவும் அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.





