MR Motion Pictures தயாரிப்பில் உருவாகும் புதிய காதல் திரைப்படமான ‘யுவர்ஸ் லவ்விங்லி’ (Yours Lovingly) படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. முத்துராம் முருகன் இயக்கத்தில் ஆகாஷ் பிரேம்குமார், ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம், 2000-களின் தொடக்கத்தில் நிலவிய பள்ளிப் பருவக் காதல், நட்பு மற்றும் மறக்க முடியாத இளமைக்கால நினைவுகளை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், 2K காலகட்டத்தின் தனித்துவமான உணர்வுகளை மீண்டும் கண்முன் கொண்டுவரும் வகையில் அமைந்துள்ளது. மாலை நேரச் சூரிய அஸ்தமனத்தின் பின்னணியில் வாக்மேன், ஹெட்போன், ஓவியப் பொருட்கள், காகித விமானம் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அன்றைய இளைஞர்களின் இசை ரசனையையும் காதல் உணர்வுகளையும் நினைவுபடுத்தும் வாக்மேன் போஸ்டரில் கவனம் ஈர்க்கிறது. மேலும், ‘சூர்யா’, ‘சில்வியா’ என்ற பெயர்கள் இடம்பெற்றிருப்பது அக்கால இளம் வயதுக் காதலின் இனிமையான தருணங்களை நினைவூட்டுகிறது. இந்தப் போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
செல்போன்களின் பயன்பாடு இன்றைய அளவுக்கு இல்லாத காலத்தில், வாக்மேனில் பாடல்களைக் கேட்பது, நேரில் சந்தித்துப் பேசுவது, கடிதங்கள் மூலம் காதலைப் பரிமாறிக்கொள்வது என இளைஞர்களின் வாழ்க்கை முறை தனித்துவமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தின் முதல் காதல், பள்ளிப் பருவ நட்பு, இளம் வயது கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை இயல்பான உணர்வுகளுடன் பதிவு செய்யும் படமாக ‘யுவர்ஸ் லவ்விங்லி’ உருவாகிறது. அன்றைய காலத்தில் பள்ளிப் பருவத்தைக் கடந்தவர்களுக்கு தங்களது பழைய நினைவுகளை மீண்டும் அசைபோடவும், இன்றைய தலைமுறையினர் அந்தக் கால வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளவும் இப்படம் ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை இயக்கும் முத்துராம் முருகன், ‘சூது கவ்வும்’ படத்தின் இயக்குநர் நலன் குமாரசாமியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மகேஷ் செல்வராஜ் எழுதியுள்ளதுடன், தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஏ.எல். ரமேஷ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். சகிஷ்னா சேவியர் இசையமைக்கிறார். இன்பா பிரகாஷ் கலை இயக்கத்தையும், டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளையும், கலைக்குமார் நடன இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.
ஆகாஷ் பிரேம்குமார், ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோருடன் ராம்ஜி, பக்ஸ், மைதிலி, சந்திரன், நசாத், துஷார், ஆஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நெய்வேலி பகுதியில் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைப்புடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
2K காலத்து காதல், நட்பு மற்றும் மறக்க முடியாத இளமைப் பருவ நினைவுகளை மையமாகக் கொண்ட ‘யுவர்ஸ் லவ்விங்லி’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






