“தி ரீல் ஃபைல்ஸ்” சீசன் 4-க்கு சோஹைல் கான் வாழ்த்து!

ஜெனோபர் பாத்திமா இயக்கத்தில், துபாயை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆந்தாலஜி தொடரான ‘தி ரீல் ஃபைல்ஸ்’ நான்காவது சீசனின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் திகில் அம்சங்களுடன் குறும்படத் தொடராகத் தொடங்கிய இந்தப் படைப்பு, தற்போது பல்வேறு கதைக்களங்களையும் சினிமா அனுபவங்களையும் உள்ளடக்கிய ஆந்தாலஜி தொடராக வளர்ச்சியடைந்துள்ளது.

ஏற்கெனவே வெளியான மூன்றாவது சீசனில் பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் முக்கியப் பங்கு வகித்ததுடன், உளவியல் சார்ந்த கதைக்களமும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், நான்காவது சீசன் புதிய கதைகளுடனும் மாறுபட்ட கதாபாத்திரங்களுடனும் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகியுள்ளது.

இந்தச் சீசனில் அப்துல் ரொசக், இப்ராஹிம் அல் சமாதி, ஜெனோபர் பாத்திமா மற்றும் ‘சாய் வித் அகமது’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான அகமது அல் மர்சூகி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அப்ரா பர்ஹானா மற்றும் ஜெனோபர் பாத்திமா இணைந்து இத்தொடரை இயக்கியுள்ளனர்.

இதன் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி ஊடகத்துறையினர் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் சோஹைல் கான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தொடரின் டிரெய்லரையும் படக்குழுவினரின் முயற்சியையும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் ஜெனோபர் பாத்திமாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் இருப்பதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

தொடரின் உருவாக்கம் குறித்துப் பேசிய இயக்குநர் ஜெனோபர் பாத்திமா, “குறும்படங்கள் வழியாகக் கதை சொல்லும் ஒரு சிறிய முயற்சியாகத் தொடங்கிய இந்தப் பயணம், நான் எதிர்பார்த்ததைவிடப் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு சீசனும் புதிய முயற்சிகளில் ஈடுபடவும், பல்வேறு திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றவும், எங்களது படைப்பாற்றலின் எல்லைகளை விரிவுபடுத்தவும் உதவியுள்ளது” என்று தெரிவித்தார்.

நான்காவது சீசனில் பல புதிய கதைகள் இடம்பெறவுள்ளன. அதன் முதல் கதையாக ‘தி கான்ஜர்’ வெளியாகவுள்ளது. தற்போது அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தொடரின் ஓடிடி வெளியீட்டுத் தளம் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.