நவராத்திரி விழாவின் நிறைவாகக் கொண்டாடப்படும் விஜயதசமியை முன்னிட்டு, குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக இரவு, பகல் பாராமல் உழைத்து வரும் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நடிகை அனுமோல் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களின் உழைப்பையும் தன்னம்பிக்கையையும் பாராட்டிக் கௌரவித்தார்.
‘அயலி’ இணையத் தொடரின் மூலம் டிஜிட்டல் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை அனுமோல். அனைவரும் சமம் என்ற எண்ணத்துடன் செயல்படும் இவர், தன்னைச் சந்தித்து ஆட்டோகிராப் கேட்கும் ரசிகர்களுக்கு ‘Always Choose Kindness’ என்ற வாசகத்தை எழுதி கையொப்பமிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மனிதநேயத்தையும் சமூக அக்கறையையும் முன்னிறுத்தும் அவரது செயல்பாடுகள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
இந்நிலையில், அண்மையில் அனுமோலைச் சந்தித்த ரசிகர்கள், நவராத்திரி விழாவில் பெண்களின் ஆற்றலையும் சாதனைகளையும் போற்றும் வகையில், பொருளாதாரச் சுதந்திரத்துடன் சுயமரியாதையோடு வாழ்ந்து வரும் பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவிகள் வழங்கிக் கௌரவிக்கலாம் எனத் தெரிவித்தனர். இந்த முயற்சிக்கு நடிகை அனுமோலும் உடனடியாக ஒப்புதல் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை கொளத்தூரில் உள்ள ஸ்ரீ செல்வ லட்சுமி திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகை அனுமோல், தேர்வு செய்யப்பட்ட 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கியதுடன், அவர்களுடன் அன்பாக உரையாடி அவர்களின் வாழ்க்கைச் சூழல்களையும் கேட்டறிந்தார்.
நடிகை அனுமோல் பேசுகையில், “இங்கு வருகை தந்திருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் வணக்கமும் நன்றியும். குடும்பத்திற்காக இரவு, பகல் பாராமல், எந்தத் தருணத்தில் வேண்டுமானாலும் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறலாம் என்ற சூழலில் ,ஆட்டோ ஓட்டுவது என்பது எளிதானதல்ல. உங்கள் குடும்பத்திற்காக மட்டுமல்லாமல், உங்கள் மீது தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்கும், சொந்தக் காலில் நின்று சுயமரியாதையுடனும் சுய அடையாளத்துடனும் திகழ்வதற்காகவும் நீங்கள் உழைப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
என்னைப் பொறுத்தவரை, எல்லோரும் சமம் என்றே கருதுகிறேன். பெண்கள் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக இருப்பதுடன், ஆரோக்கியத்தையும் கல்வியையும் பெறுவதற்கான வாய்ப்புகள் உறுதிசெய்யப்பட வேண்டும். பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, எந்தவிதப் பாகுபாடுமின்றி மனிதநேயத்துடன் வாழ்வதும் மிகவும் அவசியம். அதனால், உங்களை யாரேனும் உருவத்தாலோ, நிறத்தாலோ, மொழியாலோ சிறுமைப்படுத்தினால், அதனைப் பொறுமையுடன் புறந்தள்ளி, உங்கள் லட்சியத்தில் மன உறுதியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இந்தப் பிரத்யேக நாளில் உங்களுடன் கலந்துரையாடுவதைப் பெருமிதமாகக் கருதுகிறேன்” என்றார்.
பின்னர் ஒவ்வொரு பெண் ஆட்டோ ஓட்டுநரையும் தனித்தனியாகச் சந்தித்த அனுமோல், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அவர்களது குடும்பப் பின்னணி மற்றும் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர் பவானி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டபோது, “இதற்கு முன்பும் பல தொண்டு நிறுவனங்கள் எங்களுக்கு உதவி செய்துள்ளன. ஆனால், எங்களுடைய உண்மையான தேவைகளைப் புரிந்துகொண்டு, குளிர்ச்சியைப் பாதுகாக்கும் தண்ணீர் பாட்டில்கள், தரமான நாப்கின்கள், பவர் பேங்க், முதலுதவிப் பெட்டி போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கியதுடன், சுவையான உணவும் அளித்து எங்களை அன்புடன் கௌரவித்ததை வாழ்நாளில் மறக்க முடியாது. ஐ லவ் யூ மேடம்!” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பெண்களின் உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பெண் ஆட்டோ ஓட்டுநர்களிடையே மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.






