மதுரை மண்ணின் மண்வாசனையுடன் ஜீவாவின் “தகப்பன்” – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ரா. வெங்கட் இயக்கும் இப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பின்னணியில் உருவாகி வருகிறது. அப்பா – மகன் இடையேயான உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனிதர்களின் உணர்வுப்பூர்வமான பிணைப்புகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, படப்பிடிப்புக் காட்சிகளை நேரில் பார்த்த பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டு படக்குழுவினரைப் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு, முழுமையான கிராமியப் பின்னணியில் ஜீவா நடிக்கும் திரைப்படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘TTT’ படத்தைத் தொடர்ந்து, மதுரையின் மண்வாசனையும் அங்குள்ள மக்களின் வாழ்வியலும் கலந்த கதையில் ஜீவா நடித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது திரைப்பயணத்தில் இப்படம் ஒரு வித்தியாசமான படைப்பாக இருக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் (Marshall Robinson) இப்படத்திற்கு இசையமைக்கிறார். கதையின் உணர்வுகளை இசையின் வழியாக மேலும் வலுப்படுத்தும் வகையில் அவரது பங்களிப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும், K.B. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ வடிவமைக்கிறார். M. செல்வராஜ் ஆடைப் பொறுப்பையும், ரிதேஷ் செல்வராஜ் ஆடை வடிவமைப்பையும் மேற்கொள்கின்றனர். T. உதய் குமார் ஒலிப்பதிவுப் பணிகளைக் கவனிக்கிறார். தேனி அன்பு படப்பிடிப்புப் புகைப்படங்களைப் பதிவு செய்கிறார்.

R. பாலகுமார் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், பிரிதிவிராஜா சின்னசாமி விநியோகத் தலைவராகவும், யுவராஜ் மக்கள் தொடர்பாளராகவும், தினேஷ் அசோக் விளம்பர வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ZEE தமிழ் நிறுவனமும், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ZEE5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

படத்தின் போஸ்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குடும்ப உறவுகளின் ஆழத்தையும் மனித உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.