விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்திலிருந்து வெளியான ‘அப்பாவ போல’ ப்ரோமோ பாடல், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து யூடியூபில் 20 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. க்ரைம் திரில்லர் படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மு. மாறன் எழுதி இயக்கியுள்ள இப்படம், அதிரடி ஆக்ஷனுடன் குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான ஆழமான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அப்பாவ போல’ பாடல், தன் பிள்ளைகளின் நலனுக்காகத் தந்தை மேற்கொள்ளும் தியாகங்களையும், அவர்களின் எதிர்காலம் குறித்த கனவுகளையும் உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கிறது. வெளிப்படையாகச் சொல்ல முடியாத தந்தையின் அன்பையும், குழந்தைகள் மீதான அவரது அளவற்ற அக்கறையையும் இசை மற்றும் வரிகளின் வழியாக இப்பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது.
ஏகாதேசி எழுதியுள்ள இப்பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். மீனாட்சி இளையராஜாவின் உணர்ச்சிகரமான குரல் பாடலின் சிறப்பை மேலும் உயர்த்தியுள்ளது. மனதை வருடும் இசையும், உறவுகளின் நெருக்கத்தை வெளிப்படுத்தும் வரிகளும் இணைந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. பாடல் வெளியான குறுகிய காலத்திலேயே 20 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது, அதன் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
‘அப்பா குட்டி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் லிதன்யாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். இவர்களுடன் பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்ரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ், லிஸ்ஸி ஆண்டனி, குமார் நடராஜன், விஜயன், பிரவீணா, ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைப்பதுடன் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொள்கிறார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார். படத்தின் ஆடியோ உரிமையை விஜய் ஆண்டனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திரையரங்க வெளியீட்டு உரிமையை 5 ஸ்டார் செந்தில் பெற்றுள்ளார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி இப்படத்தை வழங்குகிறார்.
தந்தை பாசத்தை மையமாகக் கொண்ட ‘அப்பாவ போல’ பாடல் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. குடும்ப உறவுகளின் உணர்ச்சிகளையும் அதிரடி ஆக்ஷனையும் ஒருங்கிணைத்துள்ள இப்படம், தந்தை – குழந்தைகள் இடையிலான பாசப் பிணைப்பைத் திரையில் எவ்வாறு வெளிப்படுத்தப் போகிறது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.





