நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கி வரும் திரைப்படம் ‘தகப்பன்’. இப்படத்திலிருந்து ‘சொக்க வச்சாளே’ எனும் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
மார்ஷல் ராபின்சன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஹரிசரண், சைந்தவி, நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ஏற்கெனவே வெளியான ‘தங்கபுள்ள’ பாடல் தந்தை – மகன் இடையிலான பாசத்தையும் உணர்வுப்பூர்வமான உறவையும் எடுத்துரைத்தது. அதற்கு மாறாக, தற்போது வெளியாகியுள்ள ‘சொக்க வச்சாளே’ பாடல் கணவன் – மனைவிக்கு இடையே மலரும் காதல், ரொமான்ஸ் மற்றும் இல்லற வாழ்வின் இனிமையான தருணங்களைப் பதிவு செய்கிறது.
இனிமையான மெலடி இசையில் அமைந்துள்ள இப்பாடல், புதுமணத் தம்பதிகளின் அன்பு, காதல், நெருக்கம் மற்றும் அழகான குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது. கணவன் – மனைவிக்கு இடையிலான காதல் உணர்வுகளை ரசிக்கும்படியான காட்சிகளுடன் வெளிப்படுத்தியிருப்பதுடன், குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் வகையில் கண்ணியமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கதையின் முக்கியமான சம்பவங்களையும் கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களையும் பாடலின் காட்சிகளின் வழியே சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் கதையில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், கடந்த கால நிகழ்வுகளை விவரிக்கும் ஃப்ளாஷ்பேக் தொகுப்பாகவும் இந்தப் பாடல் அமைந்துள்ளது. லாரி ஓட்டுநராக இருக்கும் நாயகனுக்கும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நாயகிக்கும் இடையே உருவாகும் காதல், பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் கோயிலில் திருமணம் செய்துகொள்வது என அவர்களின் பயணம் தொடங்குகிறது. பின்னர், ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள சிறிய கிராமத்து வீட்டில் புதிதாக இல்லற வாழ்க்கையைத் தொடங்கும் தம்பதிகளின் அனுபவங்களே பாடலின் பின்னணியாக விரிகின்றன.
புதுமணத் தம்பதிகளின் அன்றாட காதல் தருணங்கள், நாயகி கர்ப்பமடையும் மகிழ்ச்சியான செய்தி என அவர்களது வாழ்க்கை அழகாக நகர்கிறது. இந்தச் சூழலில், நாயகியின் தாயிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் அவர்களது வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களும் பாடலின் காட்சிகளில் சுவாரசியமாக இடம்பெற்றுள்ளன.
மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், தந்தை – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனிதர்களின் உணர்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு ஜீவா முழுமையான கிராமத்துப் பின்னணியில் நடிக்கும் இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.
படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புப் பணிகள் நிறைவடைவதற்கு முன்பே, இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ZEE தமிழ் நிறுவனமும், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ZEE5 நிறுவனமும் பெற்றுள்ளன.
டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள ‘தகப்பன்’ திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை அழகாகப் பதிவு செய்துள்ள ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது பாடல் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் உயர்த்தியுள்ளது.





