சோல்ஜர்ஸ் ஃபேக்டரி – ரெடாக்டட் ஸ்டுடியோஸ் இணையும் புதிய இருமொழித் திரைப்படம்!

தெலுங்குத் திரையுலகில் இளைஞர்களின் வரவேற்பைப் பெற்ற ‘MAD’, ‘MAD Square’ ஆகிய திரைப்படங்களின் மூலம் பிரபலமான நடிகர் ராம் நிதின், புதிய தமிழ் – தெலுங்கு இருமொழித் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் ஜெய் பழனி, இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தனது முதல் அடியைப் பதிக்கிறார். பிராத்தனா நாதன் மற்றும் தேஜு அஸ்வினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

‘பார்க்கிங்’, ‘TTT’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற பிராத்தனா நாதன், தற்போது ‘நின்ஜா’ (Ninja) திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதேபோல், ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தின் மூலம் அறிமுகமான தேஜு அஸ்வினி, அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தேசிய விருதுகளைப் பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி (Soldiers Factory) நிறுவனம், ரெடாக்டட் ஸ்டுடியோஸ் (Redacted Studios) நிறுவனத்துடன் இணைந்து இந்தப் புதிய படத்தை உருவாக்குகிறது. இரு நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது.

இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.எஸ். சினிஷ் தலைமையில் செயல்பட்டு வரும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம், தொடர்ந்து மாறுபட்ட கதைகளைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படம் மூன்று தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்று பெருமை சேர்த்தது. இதற்கு முன்பு சத்யா, சந்தீப் கிஷன் நடித்த தெலுங்குப் படமான ‘விவாஹ போஜனம்பு’, சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ உள்ளிட்ட படங்களையும் இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’, ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘நின்ஜா’ உள்ளிட்ட புதிய திரைப்படங்களையும் தயாரித்து வருகிறது.

சஞ்சன் ஜி. தொடங்கிய ரெடாக்டட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. ‘சூப்பர் ஹீரோ’, ‘ஃபேமிலி ட்ரிப்’ உள்ளிட்ட படங்களுடன், ஜெயராம் மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனத்துடன் கைகோர்த்திருப்பதன் மூலம் தெலுங்குத் திரையுலகிலும் தனது தயாரிப்புப் பயணத்தை விரிவுபடுத்துகிறது.

இந்தப் புதிய கூட்டணி குறித்து சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ் தெரிவித்ததாவது:

“எங்களின் அடுத்த தெலுங்கு – தமிழ் திரைப்படத் தயாரிப்பிற்காக ரெடாக்டட் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். திறமையான நடிகர்கள் மற்றும் புதிய படைப்பாற்றல் கொண்ட தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து உருவாகும் சுவாரஸ்யமான காதல் கதை இது.

சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனத்தைப் பொறுத்தவரை, புதிய திறமைகள், புதுமையான சிந்தனைகள் மற்றும் சினிமா மீதான ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்ளும் நபர்களுடனான கூட்டணிகளை எப்போதும் வரவேற்று வருகிறோம். இந்தக் குழுவினரை ஒன்றிணைப்பதில் மகிழ்ச்சியடைவதுடன், ஒரு சிறப்பான படைப்பை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

எங்களின் பயணத்தில் இது மற்றுமொரு உற்சாகமான தொடக்கமாகும். பல்வேறு மொழிகளில் இன்னும் பல சுவாரஸ்யமான கதைகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் இருக்கிறோம்.”

காதலை மையமாகக் கொண்ட கதைக்களத்தில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகிறது. தற்போது ‘புரொடக்ஷன் No. 7’ என்ற தற்காலிகப் பெயரில் தயாராகி வரும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம் நிதின், பிராத்தனா நாதன், தேஜு அஸ்வினி ஆகியோரின் கூட்டணியில், புதிய இயக்குநர் கார்த்திக் ஜெய் பழனியின் இயக்கத்தில் உருவாகும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.