தமிழ்த் திரையுலகில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நிவாஸ் கே. பிரசன்னா, இசையமைத்து பாடியுள்ள புதிய காதல் பாடலான ‘இற இறகாக…’ வெளியாகியுள்ளது. பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலாக இது வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் கே. மணிகண்டன் நடிப்பில், அதிரடி மற்றும் அரசியல் பின்னணியுடன் உருவாகி வரும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘IGNORE’ ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ‘இற இறகாக…’ பாடல், படத்தின் காதல் உணர்வுகளையும் நாயகனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பாடலாசிரியர் ஜோதி கண்ணா எழுதியுள்ள இப்பாடலுக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து தனது குரலில் பாடியுள்ளார். வாழ்க்கையின் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் நாயகன், காதலியின் அன்பையும் அரவணைப்பையும் சந்தித்த பிறகு காதலின் மீதான நம்பிக்கையை மீண்டும் பெறும் உணர்வை இந்தப் பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது.
கடினமான சூழல்களையும், அன்றாட வாழ்க்கையின் சவால்களையும் எதிர்கொள்ளும் நாயகனுக்கு காதல் எவ்வாறு புதிய நம்பிக்கையையும் மன அமைதியையும் வழங்குகிறது என்பதைப் பாடலின் காட்சிகளும் வரிகளும் உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கின்றன. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் திவ்யா ஸ்ரீ பாதா, நாயகனின் காதலியாக நடித்துள்ளார். இருவருக்கும் இடையிலான காதல் தருணங்களை மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
நீதிக்காகக் குரல் கொடுக்கும் ஒரு மனிதனின் போராட்ட வாழ்க்கைக்கு இடையே மலரும் காதலையும், அவனது மனநிலையில் ஏற்படும் மாற்றங்களையும் எடுத்துரைக்கும் ‘இற இறகாக…’ பாடல், ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான மற்றொரு முகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் பா. ரஞ்சித், அதிதி ஆனந்த் ஆகியோரின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. சந்தோஷ்குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
காவல்துறையில் பணியாற்றும் ஒரு மனிதன் நேர்மையுடனும் கண்ணியத்துடனும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருக்கிறான். ஆனால், ஊழலும் அதிகார முறைகேடுகளும் நிறைந்த அமைப்புக்குள் அவன் சிக்கும்போது, அநீதிக்குத் தலைவணங்குவதா அல்லது அதை எதிர்த்துப் போராடுவதா என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
தனது வாழ்க்கையையும் இருப்பையும் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தொடங்கும் அவனது போராட்டம், நாளடைவில் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக உருவெடுக்கிறது. ஒருகட்டத்தில் அவன் விரும்பாத தலைமைப் பொறுப்பையும் ஏற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. போராட்டத்தின் தீவிரமும் அதற்காக அவன் கொடுக்க வேண்டிய விலையும் அதிகரிக்கும்போது, ஒரு சாதாரண மனிதனாக இருந்தவன் மக்களின் பாதுகாவலனாக மாறும் பயணமே இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.
அதிரடி, சமூக அரசியல் மற்றும் மனித உணர்வுகள் எனப் பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘மக்கள் காவலன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.





